தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று சுப்பிரமணிய சுவாமி கூறியிருப்பதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜகவின் மூத்த தலைவர் எனக் கூறப்படும் நாடாளுமன்ற மேலவையின் நியமன உறுப்பினராக உள்ள சுப்பிரமணிய சுவாமி, அரசியலமைப்பு சட்டப் பிரிவு 356ஐ பயன்படுத்தி தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்திட வேண்டும் என்றும், சட்டப் பேரவையை முடக்கி வைக்க வேண்டும் என்றும், சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை ஆறு மாத காலத்திற்கு அமல்படுத்திட வேண்டும் என்றும், மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
சுப்பிரமணிய சுவாமியின் இத்தகைய கருத்து கடும் கண்டனத்திற்குரியது. இக்கருத்து அவருடைய சொந்த கருத்தா? அல்லது பாஜக-வின் அகில இந்திய தலைமையின் கருத்தா? அல்லது நாட்டை ஆளும் பிரதமரின் கருத்தா? அல்லது தமிழ்நாடு பாஜக-வின் கருத்தா? என்பதை சம்பந்தப்பட்டவர்கள் நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.
ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைக்க முற்படுவது ஜனநாயக விரோத செயலாகும். சுவாமியின் கருத்தை அலட்சியப்படுத்திட முடியாது.
பாஜகவின் தூண்டுதலால் இக்கருத்து வெளிப்படுத்தப்படுகின்றது. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பாஜக முயல்கின்றது. முதல்வரின் உடல்நிலையைக் காரணம் காட்டி, ஜனநாயக விரோத செயலில் யார் ஈடுபட்டாலும், அதனை தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்" என்று கூறியுள்ளார்.

No comments:
Write comments