ஒரு நாள் காலை வீட்டில் ஒரு பிரபல பத்திரிக்கையை படித்துக் கொண்டிருந்தேன்.நான் படிக்கும் பக்கத்தையும் என் முக மாற்றத்தையும் கண்ட என் தந்தை "என்னப்பா!" என்றார்.
"இல்லை இதை பார்த்தீங்களா!" என்று அந்த பக்கத்தை காட்டினேன்.ஆமாம் பார்த்தேன்,நீ வெளியில் இருப்பதால் இவ்வளவு அதிர்ச்சி அடைகிறாய் என்றபடி தொடர்ந்தார்.
"ஒரு காலமிருந்தது கணவன் இறந்து விட்டால் மொட்டை அடித்து மூலையில் இருத்தி விடுவார்கள்."பால்ய விவாகமும்" "சதியும்" இருந்த அந்த சமூகத்தில் பெண்கள் விவாகரத்து / மறுமணம் எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாதது,ஆனால் சமீப காலங்களில் வரும் “மணமகன்/மணமகள் தேவை” விளம்பரங்களில் ஐயர், ஐயங்கார் வரன்களில் வயது 26–30, சம்பளம் இலட்சங்களில் ஆனால் பெரும்பான்மை “விவாகரத்தானவர்” என்றே இருக்கிறது.மாற்றம் வரவேற்கத்தக்கதுதான், ஆனால் இது மிதமிஞ்சி இருப்பதுதான் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது என்றார்...
சரி விசயத்துக்கு வருவோம். விவாகரத்து எங்கு கடினம் என்று சொல்லப்படுகிறதோ அந்த சமூகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால்,தலாக் தலாக் என்று எளிதாக விவாகரத்து செய்ய முடியும் என சொல்லப்படும் இஸ்லாமிய சமூகங்களில் வந்து விகிதாசார அடிப்படையில் புள்ளி விபரங்கள் எடுத்துப் பாருங்கள்.விவாகரத்துகள் மிக குறைவாகத்தான் இருக்கும்.
மேலும் இந்திய முஸ்லீம்கள் “ஜமாஅத்” என்ற கட்டமைப்புகளில் சேர்ந்து வாழ்வதால்,அவர்களுடைய திருமண அனுமதி கடிதம் முதல் எல்லா திருமண விவகாரங்களிலும் ஜமாத்தார்களின் கடிவாளம் இரு்க்கும்.சுயமாக எதுவும் செய்ய மாட்டார்கள்.விவாகரத்து விவகாரங்கள் வந்தால்,ஜமாஅத்துகளில் பட்டென்று "வெட்டி" விட மாட்டார்கள்.அங்கும் பல சிட்டிங் பேச்சு வார்த்தைகள் நடக்கும்.விவகாரங்கள் விரிவாக அலசப்படும்.
நீதிமன்றங்களைப் போல வக்கீலின் வாதத்திறமைகள் இங்கு எடுபடாது.ஊரு ஜமாஅத்துக்கு தம்பதிகளின் குடும்பத்தை பற்றியும்,பிரச்சனையை பற்றியும் அக்கு முதல் ஆணிவேர் வரை தெரிந்திருக்கும்.விவாதங்களில் அவைகளை போட்டு உடைத்து விடுவார்கள்.
நியாயமான காரணங்களுக்காக மட்டுமே விவாகரத்துகள் கொடுக்கப்படும்.நியாயமில்லா காரணமாக இருந்தால் கண்டவனும் நாக்கில் பல் போட்டு கேள்வி கேட்பான்,ஊரில் மானம் போய்விடும்.ஒருவன் ஜமாஅத்தை மீறி தலாக் சொல்ல முடியாது,அப்படி மீறிப் போனால்,அடுத்த திருமணம் செய்ய ”நோ அப்ஜெக்சன்” கடிதம் கொடுக்க மாட்டார்கள்.
அது இல்லாமல் எந்த முஸ்லீம் பெண்ணையும் அவன் மனம் முடிக்க முடியாது,பெண் சார்ந்துள்ள ஜமாஅத் அதை செய்தும் வைக்காது.மேலும் பள்ளிவாசல்களில் அத்தனையும் பக்காவாக ஆவணப்படுத்தப்படுகிறது. இவ்வளவு ஏற்பாடுகளையும் இந்திய இஸ்லாமிய சமூகம் செய்து வைத்துள்ளது.
அதேசமயம் ஜமாஅத்துகளில் நியாயமான வழிகளில் வழக்குகள் அணுகப் பட்டாலும்,பெரும்பான்மை ஜமாத்துகளில் குர்ஆன் சுன்னாவின் வழியில் விவாகரத்துகள் தீர்க்கப்படுகிறதா? என்றால் இல்லை என்பேன்.அதை செய்ய வேண்டிய பொறுப்பு முஸ்லீம் தனியார் சட்ட வாரியத்தின் முன்பு இருக்கிறது என்றால் மிகையில்லை.அவையும் நடந்துவிட்டால் இந்த ஒன்றிரண்டு பெண்களும்,நாங்கள் பாதிக்கப்படுகிறோம் "எங்களுக்கு குர்ஆனில் உள்ளபடி தீர்ப்பு வழங்கச் சொல்லுங்கள் என கோர்ட்டுக்கு செல்ல மாட்டார்கள்.
இவற்றிக்கு எல்லாம் மேல் தலாக்கை இஸ்லாம் ஒரு வெறுக்கதக்க அனுமதியாக அனுமதித்து இருப்பதால் உண்மையான இஸ்லாமியர்கள் அதன் பக்கம் நெருங்க பயப்படுவார்கள்...
சரி ஜீவனாம்ச விசயத்துக்கு வருவோம்.உங்கள் சமூகத்தில் ஜீவனாம்சம் கொடுப்பதில்லையே! அது பெண்களுக்கான அநீதி இல்லையா? என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.அதற்கான அவசியம் பெரும்பாலும் இருக்காது.ஏனெனில் விவாகரத்து செய்யப்படும் ஒரு சில பெண்களும் மறுமணம் ஆகி சென்று விடுவார்கள்.
அதனால் கைம்பெண்கள் குறைவான சமூகமாகத்தான் இஸ்லாமிய சமூகம் இருக்கிறது.ஒரு வேளை மறுமணம் செய்ய விருப்பமில்லாமல் பெரிய குழந்தைகள் இருப்பவராக இருந்தால் அந்த குழந்தைகளின் தந்தை தன் குழந்தைகளை வளர்க்கவும் பராமரிக்கவும் மாதந்தோறும் ஒரு தொகையை அந்தப் பெண்ணுக்கு தர இஸ்லாமிய அடிப்படையில் ஜமாஅத்துக்கள் நிர்பந்திக்கும்.
மேலும் ஜீவனாம்சத்தை ஏன் இஸ்லாம் ஒரு குறிப்பிட்ட கால கெடுவுக்குள் நிர்ணயித்துள்ளது என்பதை அலசினால் இந்த கட்டுரை மிகப் பெரியதாக ஆகி விடும்.அதனால் அதை வேறு ஒரு கட்டுரையில் பார்க்கலாம்.
மேலும் முஸ்லீம் ஆண்கள் தலாக் கொடுக்கும் கணவர்களாக மட்டும் இல்லை,தன் உடன் பிறந்த பெண்களுக்கு சகோதரனாகவும்,பெண் குழந்தைகளின் தந்தையாகவும் இருப்பதால் தன் குடும்பத்தை பாதிக்கும் ஒரு விஷயமாக அது இருந்திருந்தால்,இப்படி கொடி பிடித்துக் கொண்டு இருக்க மாட்டார்கள்.அதை எப்போதோ தூக்கிப் போட்டு இருப்பார்கள்.
இங்கு நடப்பவை எல்லாம் நன்றாகவே நடக்கிறது,சில குறைகள் இருந்தால் அதை நாங்கள் சரி செய்து கொள்கிறோம்.அதனால் முஸ்லீம் பெண்கள் பாதிக்கப் படுகிறார்கள் பொது சிவில் சட்டம் வேண்டும் என்றெல்லாம் பேசுபவர்களை கேட்டுக் கொள்கிறேன்.தெரியாதவர்கள் தெளிந்து கொள்ளுங்கள்,எல்லாம் தெரிந்தும் முதலைக் கண்ணீர் வடிக்கும் சாத்தான்களே! நீங்கள் “அப்பால் போங்கள்”.
நன்றி: அகமுகன்
முகநூல் தோழர்
முகநூல் தோழர்

No comments:
Write comments