காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி இந்து மக்கள் கட்சியினர் வாணியம்பாடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.காவிரி நதி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பான விசாரணையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அக்டோபர் 4ஆம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதற்கு முந்தைய நாளில்,காவிரி நதி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று மத்திய பா.ஜ.க அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தது.
அதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை திருத்த வேண்டும். மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால், இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிடும் அதிகாரமில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தது.
இதற்கு தமிழகம் முழுவதும் பரவலாக எதிர்ப்பு கிளம்பியது. ஆளும் பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களும் எழுந்து வருகிறது. அதேசமயம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில், போராட்டங்கள் நடைபெற்றும் வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மத்திய அரசு காவிரி மேலண்மை வாரியம் அமைக்க தடை விதித்ததை கண்டித்தும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Write comments