புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, அதிகாரத்தை கையில் எடுத்துள்ளதால் அவருக்கு அம்மாநில அரசியல் கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பொதுவாக மாநில அரசில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கும், முதல்வருக்குமே அதிகாரம் அதிகம். ஆனால், புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் இங்கு ஆளுநருக்கே அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் புதுச்சேரி ஆளுநரான கிரண்பேடியே சுயமாக திட்டங்களை அறிவிப்பதும், அதிகாரிகள் மீது தன்னிச்சையாக நடவடிக்கை எடுப்பதும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. சமீபத்தில் கூட்டுறவு பதிவாளர் ஒருவர் வாட்ஸ்-அப்பில் ஆபாச படம் அனுப்பியதாக எழுந்த பிரச்னையை அடுத்து அவரை உடனடியாக ஆளுநர் இடைநீக்கம் செய்தார். இதுபற்றி முதலமைச்சருக்கோ, அமைச்சரவைக்கோ அவர் தெரிவிக்கவில்லை. மேலும் அவர் மீது போலீஸ் நடவடிக்கைக்கும் உத்தரவிட்டார். இது, பிரச்னையை உருவாக்கியது. இதையடுத்து வாட்ஸ்-அப் போன்றவற்றில் அரசு தகவல் பரிமாற்றங்களை நடத்துவதை தடை செய்து முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார். ஆனால், இந்த உத்தரவை ஆளுநர் ரத்து செய்து விட்டார்.
இதனால் ஆளுநருக்கும், அமைச்சரவைக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்தது. இந்த நிலையில் ஆளுநர் கிரண்பேடி பொது மக்களுக்கு கடிதம் ஒன்று வெளியிட்டார். அதில், “சட்ட விதிகளின்படி யூனியன் பிரதேசங்களில் ஆளுநருக்குத்தான் அதிகபட்ச அதிகாரம் இருக்கிறது. எனவே, நான் அதன்படி செயல்பட்டு கொண்டு இருக்கிறேன்” என்று கூறினார். இதனால் அமைச்சரவை எடுக்கும் முடிவை ஆளுநர் நிராகரிக்கும் நிலைமை புதுவையில் ஏற்பட்டுள்ளது. இது, புதுவையின் வளர்ச்சியை பாதிக்கும் என்று அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. புதுவையில் உள்ள பெரும்பாலான கட்சிகள் ஆளுநருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளன. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி ஆளுநருக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் இதுபற்றி கூறும் போது, “ஆளுநருக்கே எல்லா அதிகாரமும் என்றால் புதுவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி எதற்கு? இங்கு சட்டமன்றம் எதற்கு?” என்று கடுமையாக சாடினார். இதேபோல் அதிமுக சட்டமன்ற தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறும்போது, “ஆளுநர் தனக்கே அதிகாரம் என்று கூறுவது மாநில அரசின் செயல்பாட்டை முடுக்குவது போன்றதாகும்” என்றார். இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளும் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. “ஆளுநரின் செயல்பாடுகள் ஜனநாயகத்துக்கே ஆபத்து விளைவிக்கும் வகையில் இருக்கிறது. மக்களாட்சி தத்துவத்தையே சீர்குலைப்பதாக இருக்கிறது” என்று அவர்கள் தெரிவித்தனர். இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் விசுவநாதன் கூறும் போது, “யூனியன் பிரதேசத்தில் ஆளுநருக்கே அதிக அதிகாரம் என்ற சட்ட விதியை மாற்ற வேண்டும்” என்று கூறினார். இதேபோல் திமுக, விடுதலை சிறுத்தை கட்சிகளும் ஆளுநர் கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

No comments:
Write comments