சட்டப் பேரவைத் தேர்தல் திங்கள்கிழமை நடைபெற்றது. தேர்தல் விவரங்கள் குறித்து, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
சென்னை உள்பட நகரப் பகுதிகளில் வாக்குப் பதிவு குறைந்துள்ளது. ஊரகப் பகுதிகளில் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் வாக்குப் பதிவு குறைந்ததற்கான காரணங்கள் குறித்து ஆராய்வோம்.
எந்தெந்த வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்தப்படும் என்பது குறித்து தேர்தல் பார்வையாளர்களே முடிவு செய்வர். வாக்குப் பதிவின் போது பயன்படுத்தப்பட்ட ஆவணங்களைச் சரிபார்த்த பிறகு மறுவாக்குப் பதிவு தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்படும். ஆவணங்களில் தவறுகள் ஏதும் இல்லாவிட்டால் மறுவாக்குப் பதிவுக்கு வாய்ப்பில்லை.
6 மணிக்கு மேல் இல்லை:
வாக்குப் பதிவு நிறைவடைய சில நிமிடங்களுக்கு முன்பாக வாக்குச் சாவடிக்கு சென்றவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. காஞ்சிபுரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி உள்பட நான்கு மாவட்டங்களில் ஒரு சில வாக்குச் சாவடிகளில் மட்டுமே 6 மணிக்குள்ளாக சிலர் வந்தனர்.
அவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. தூத்துக்குடி, திருத்தணி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள மூன்று கிராமங்களில் வாக்களிக்க பொது மக்கள் யாரும் வரவில்லை. பிற்பகலுக்குப் பிறகு தேர்தல் அதிகாரிகள் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின், வாக்கினை பதிவு செய்தனர்.
விழிப்புணர்வு பிரசாரம்:
வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, சமூக ஊடகங்கள் மூலமாக தேர்தல் துறை பிரசாரம் செய்தது. இதற்காக ரூ.13.50 லட்சம் செலவிடப்பட்டது. மொத்தமாக விழிப்புணர்வு பிரசாரத்துக்கு மட்டும் ரூ.35 லட்சம் செலவானது என்றார் ராஜேஷ் லக்கானி.
மக்களவைத் தேர்தல்:
கடந்த மக்களவைத் தேர்தலின் போது வாக்குப் பதிவு 73 சதவீதம் அளவுக்கு இருந்தது. இப்போதும் அதே அளவை எட்டியுள்ளது. மக்களவைத் தேர்தலின் போது வாக்காளர்கள் 5.5 கோடி இருந்தனர்.
ஆனால், இப்போது 30 லட்சம் அதிகரித்து 5.8 கோடி வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், வாக்குப் பதிவு சதவீதம் குறையும் என்றார் லக்கானி.
ரூ. 570 கோடி கோவை கொண்டு செல்லப்படுகிறது:
திருப்பூர் அருகே தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 570 கோடி கோவைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருப்பூர் அருகே தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 570 கோடி கோவைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியின் கோவைத் தலைமைக் கிளையிலிருந்து ஆந்திரத்தில் உள்ள விசாகப்பட்டினத்துக்கு கடந்த 13-ஆம் தேதி இரவு மூன்று கன்டெய்னர் லாரிகளில் ரூ. 570 கோடி ரொக்கம் அனுப்பிவைக்கப்பட்டது. இந்த மூன்று கன்டெய்னர் லாரிகள் திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர், சங்கப்பள்ளிக்கு இடைப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் (எண்:47-இல்) வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த தேர்தல் நிலைக் கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட இந்த மூன்று கன்டெய்னர் லாரிகளும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குக் கொண்டு வரப்பட்டு, கண்காணிப்பு கேமராக்களுடன், துணை ராணுவம், உள்ளூர் காவல் துறையினர் பாதுகாப்பில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தேர்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்த பின்னர் திங்கள்கிழமை மாலையில் இந்தப் பணம் விடுவிக்கப்படலாம் என கருதப்பட்டது. ஆனால், திங்கள்கிழமை இரவு வரை இந்த கன்டெய்னர் லாரிகள் அங்கேயே நிறுத்தப்பட்டிருந்தன.
இந்தப் பணம் மீண்டும் கோவை கொண்டு செல்லப்பட்டு, அதன் பிறகே பாதுகாப்புடன் ஆந்திரம் கொண்டு செல்வது குறித்து ஆலோசிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதையே ஆந்திர காவல் துறையினரும் உறுதி செய்கின்றனர். ஆனால், திருப்பூரில் இருந்து இந்தப் பணம் எப்போது கோவைக்குக் கொண்டுசெல்லப்படும் என்பது தெரியவில்லை என்றனர் அதிகாரிகள்.
செய்தி :: சாஹிப்...

No comments:
Write comments