அமெரிக்காவின் சிகாகோ நகரில் பர்தா அணிந்து சென்ற பெண்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் என கூறி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுஜானே தம்ரா என்ற அந்த பெண் தனது தாயுடன் கடந்த வியாழக்கிழமை சிகாகோ நகரின் வீதிகளில் சென்று கொண்டிருந்த போது தங்களை நோக்கி ஒரு பெண் எச்சில் துப்பி ஐ.எஸ் பயங்கரவாதிகள் என அழைத்தது மட்டுமல்லாமல் தங்களை கடுமையாக தாக்கியதாக குற்றஞ்சாட்டியுள்ளார். அங்கிருந்த ஒரு நபர் தனது மொபைல் போன் மூலம் நடந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்திருக்கிறார்.
அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதை காணும்போது " நீ ஐ.எஸ் பயங்கரவாதி தானே?" என கூறியவாரு பெரு பெண் சுஜானே தம்ரா மற்றும் அவரது தாயை கடுமையாக தாக்குகிறார். தங்கள் மீது அந்த பெண்மணி 5 முறையாவது தாக்கியிருப்பார் ஆனால் அருகில் நின்றவர்கள் யாரும் அதனை தடுக்க முன்வரவில்லை என சுஜானே என்.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை பார்த்து பலரும் சிரித்துக்கொண்டிருந்தனர். ஆமாம்! இவர்கள் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தான் அவர்களை நல்ல தாக்குங்கள் என அப்பெண்மணிக்கு ஆதரவாக கூச்சல் போட்டுக்கொண்டிருந்ததாக சுஜானே தெரிவித்தார்.
தற்போது ஒட்டு மொத்த இஸ்லாமியர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வரும் அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்பின் பேச்சுக்கான எதிரொலியாகவே இதனை தான் பார்ப்பதாக அவர் தெரிவித்தார். டிரம்பின் பேச்சு இவர்களை உசுப்பிவிட்டிருப்பதாகவும், அவர் கூறியதை இன்று இவர்கள் செயல்படுத்திவருவதாக சுஜானே குற்றஞ்சாட்டினார். சிகாகோ காவல்துறை இச்சம்பவம் நடந்ததை உறுதி செய்துள்ளதை அடுத்து இது தொடர்பான விசாரணையை துவங்கியுள்ளது. இருந்த போதிலும் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்த மறுத்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இச்சம்பவத்திற்கு சிக்காகோவில் செயல்பட்டு வரும் அமெரிக்க-இஸ்லாமிய நிறுவனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வெறுப்பின் காரணமாகவே இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதாக அதன் தலைவர் ஹோடா கதேபி தெரிவித்துள்ளார். இதனை சாதாரண சம்பவமாக எடுத்துக்கொள்ளாமல் தீவிரவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:
Write comments