ஒரு திரைப்படம் ஷூட்டிங், எடிட்டிங் போன்ற அனைத்துப் பணிகள் முடிந்ததும் தணிக்கை குழுவுக்குச் செல்லும். ஆனால், சில வருடங்களாக தணிக்கை குழுவுக்கும், திரைப்படத் துறையினருக்கும் அதிகளவு மனக்கசப்பு ஏற்படுகின்றன. அதற்கு முக்கியக் காரணம் திரைப்படங்களுக்கு தணிக்கைக் குழு போடும் வெட்டுகள். குறிப்பாக, சமீபத்தில் வந்த 'உட்தா பஞ்சாப்' படத்தில் பல காட்சிகளை எடுக்கக் கூறியதால் பெரியளவுக்கு சர்ச்சையானது.
இந்நிலையில், திரைப்படத் துறையில் இருக்கும் அனைவருக்கும் வரவேற்கத்தக்க ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை தகவலின்படி, CBFC (தணிக்கைக் குழு) இனிமேல் படங்களுக்கு தணிக்கைக் குழு U, A, U/A போன்ற சான்றிதழ் மட்டுமே வழங்க வேண்டும் என்பதுபோல் சட்டம் வரப்போகிறது.
இதுகுறித்து CBFC தலைவர் பஹ்லாஜ் நிஹலானி கூறியதாவது: தணிக்கைக் குழுவில் ஏற்படும் சர்ச்சையால் Cinematograpy act (ஒளிப்பதிவு சட்டம்) மூலம் இந்தத் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறும்போது, சென்சார் போர்டு முற்றிலும் ஒரு சான்றிதழ் மட்டும் வழங்கும்விதமாக மாறும் எனக் கூறினார்
சட்டம் நிறைவேற்றப்பட்டால் தணிக்கைக் குழுவில் ஏற்படும் மாற்றங்கள்:
1. உளவியலாளர்கள் உட்பட குழந்தை உரிமைகள் பாதுகாப்பு மற்றும் தேசிய பெண்கள் ஆணையம் நியமிக்கும் இரண்டு உறுப்பினர்கள்தான் தணிக்கைக் குழுவில் இருக்க முடியும்.
2. படங்களுக்கு U, A, U/A என கொடுக்கப்பட்டு வரும் சான்றிதழ்கள் U12+, U15+, A + ( தீவிர வன்முறை மற்றும் பாலியல் காட்சிகள்) என மாற்றப்படும்.
3. தணிக்கைக் குழு ஒரு நாளில் இரண்டுக்கும் மேற்பட்ட படங்களுக்கு சான்றிதழ் வழங்கக் கூடாது.
4. அவசர அனுமதிபெற விரும்பும் திரைப்படம் கூடுதல் கட்டணம் செலுத்தி ' தட்கல் ' பிரிவின் முறையில் பார்க்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
5. சான்றிதழ் கொடுப்பதற்கு வாங்கப்படும் பணம் தொழிலாளர் அமைச்சகத்துக்குச் சென்றுவிடும். பிறகு, அங்கிருந்து திரைப்படத் துறையில் இருக்கும் தொழிலாளர்கள் நலனுக்கு பணம் அனுப்பப்படும்.

No comments:
Write comments