கஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களின் போது இராணுவ வீரர்கள் மிகுந்த கட்டுப்பாடுடன் நடந்து கொண்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு அகில இந்திய வானொலியில் நேற்றைய தினம் உரையாற்றிய அவர் கூறும்போது, கஷ்மீர் பள்ளத்தாக்கில் வன்முறைகளை எதிர்கொள்வதிலும், பயங்கரவாத தாக்குதல்களை முறியடிப்பதிலும் நமது இராணுவ வீரர்கள் கட்டுப்பாடுடன் செயல்பட்டது பாராட்டக்கூடிய ஒன்றாகும்.
பதான்கோட் விமான தளத்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை வலிமையோடு எதிர்கொண்டு நமது இராணுவ வீரர்கள் முறியடித்தனர். மேலும் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி நடத்தப்படும் தாக்குதல்களையும், இந்தியாவிற்குள் ஊடுருவும் முயற்சிகளையும் அவர்கள் திறம்பட பணியாற்றி முறியடித்து வருகின்றனர். நமது எல்லைப்பகுதிகளை அனைத்து விதங்களிலும் கண்காணிக்க வேண்டியது அவசியமாகும். அதனால் குறைந்த காலக்கெடுக்குள் தயாராகும் வகையில் நமது படைகளை எப்போது தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். மேலும் நமது போரிடும் முறைகளையும் கருவிகளையும் எப்போதும் மேம்படுத்திக்கொண்டிருக்க வேண்டும" இவ்வாறு பாரிக்கர் பேசினார்.
பயங்கரவாதிகளின் தாக்குதல்களை எதிர்கொள்வதற்காக பதிலடி கொடுப்பதும், இந்தியாவிற்குள் ஊடுருவ நினைக்கும் பயங்கரவாதிகளை தடுத்து நிறுத்துவதற்காக சண்டையிடுவதும் வரவேற்கக்கூடியதே. அதில் இராணுவ வீரர்கள் எந்த கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும் என்பதில் எந்த அவசியமும் இல்லை. நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் பாரபட்சமின்றி செயல்படவேண்டும். அதே சமயம் கஷ்மீரில் ஏற்பட்ட வன்முறையில் இராணுவ வீரர்கள் கட்டுப்பாடுடன் செயல்பட்டனர் என்ற பச்சை பொய்யை மத்திய அமைச்சர் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.
இலங்கையில் புலிகளை ஒடுக்கிறோம் என்ற பெயரிலேயே கொத்துக்கொத்தாய் பெண்கள், குழந்தைகள் கொல்லப்பட்டனர். அதே போல கஷ்மீரிலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை என்கிற பெயரில் அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இராணுவ வீரர்கள் பயன்படுத்திய பெல்லட் குண்டுகளால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் தங்கள் கண் பார்வையை இழந்துள்ளனர். மத்திய அமைச்சர் ராஜ்னாத் சிங் பெல்லட் குண்டுகளை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்ட போதிலும், அதை விட வலிமை குறைந்த ஆயுதங்கள் தங்களிடம் இல்லை என்றும், பெல்லட் குண்டுகளை உபயோகப்படுத்துவதிலிருந்து தவிர்க்க முடியாது என இராணுவ தளபதி கூறியது குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments