நேற்று மாலை குடும்பத்தோடு சத்யம் தியேட்டரில் 'ஜோக்கர்' திரைப்படம் பார்த்தேன். படத்தின் இயக்குநரான ராஜு முருகனை நீண்ட நாட்களுக்குப்பிறகு திரையரங்கிலேயே சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது இன்னொரு இன்ப அதிர்ச்சி.
கொஞ்ச நாட்களாகவே, நடிகை வித்யாபாலன் பத்து நிமிடத்துக்கு ஒருமுறை FM ரேடியோவிலும் தொலைக்காட்சியிலும் விளம்பரமாகப் பேசிவரும் கிராமத்துப் பெண்களுக்கான டாய்லெட் பிரச்னைதான் படத்தின் மையக்கரு. கூடவே, இன்று உலகளாவிய நாடுகளில் விவாதப் பொருளாக இருக்கும் Euthanasia எனப்படும் கருணைக் கொலை விஷயத்தையும் மெல்லிய இழையோட்டமாகக் கையாண்டிருக்கிறார். உள்ளாட்சி தொடங்கி உச்சநீதிமன்றம் வரை ஜனாதிபதி, பிரதமர், ஆளும்கட்சி, எதிர்க்கட்சி, உதிரிக்கட்சிகள் என எதையும் விட்டுவைக்கவில்லை. சமகால அரசியலையும் சமூகக் கட்டமைப்பையும் இதைவிட பச்சையாக தோலுரித்துக்காட்ட முடியாது என்றளவுக்கு உணர்வோடு செய்திருக்கிறார் இயக்குநர் ராஜு முருகன். உணர்வைத் தட்டியெழுப்புகிற, சிந்திக்கவைக்கிற, நையாண்டியான அதேநேரம், மிகவும் சக்திவாய்ந்த வசனங்கள். எதையும் பூசி மெழுகாமல் அப்பல்லோ, அம்பானி, பெப்சி என பெயர்களை நேரடியாகச் சொல்கிற துணிச்சல். குரு சோமசுந்தரம், மு.ராமசாமி, ரம்யா பாண்டியன், காயத்ரி கிருஷ்ணா, பவா செல்லத்துரை என்ற அத்தனை கதாபாத்திரங்களும் நம் சொந்த கிராமத்துக்குச் சென்றுவந்த உணர்வை ஏற்படுத்துகிற அளவுக்கு யதார்த்தம். ஷான் ரோல்டனின் இசை பொருத்தமாக உள்ளது. யுகபாரதி, ரமேஷ் வைத்யா பாடல் வரிகள் அருமை. சுவிஸ் பாடல் காட்சிகளில்தான் ஹெலிகேம் பயன்படுத்த வேண்டுமா என்ன? எங்கள் கிராமத்து அழகையும் ரசித்துப் பாருங்களேன்! என, அசத்தியிருக்கிறார் ஒளி உணர்வாளர் செழியன்.
சென்ற ஆண்டு, தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சிக்காக திண்டுக்கல் சென்றிருந்தபோது நண்பர் சுஜித்குமாரோடு அங்கு ராஜு முருகனின் முதல் படமான 'குக்கூ' பார்த்தேன். அடடா... இந்தப் படத்தை குடும்பத்தோடு பார்க்காமல் விட்டுவிட்டோமே! என்று வருத்தப்பட்டேன். இந்தமுறை 'ஜோக்கர்' பார்க்க குடும்பத்தோடு சென்றேன். 15 வயது மகளைப் பக்கத்தில் உட்காரவைத்துப் பார்க்கும்போது, எந்தக் காட்சியிலும் நெளிய வேண்டிய அவசியம் இல்லாமல் ஆபாசம், வன்முறை இரண்டும் துளிகூட இல்லாத ஒரு படத்தைக் கொடுத்ததற்காக நண்பர் ராஜு முருகனுக்கு மனமார்ந்த பாராட்டுகள்

No comments:
Write comments