கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் நேற்று இரவு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். பிரேத பரிசோதனைக்குப் பின்னர் இன்று அடக்கத்திற்காக சசிகுமார் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லும்போது துடியலூரில் திடீரென பதட்டம் ஏற்பட்டது. துடியலூரில் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஏடிஜிபி திரிபாதி விரைந்து சென்றார். தீயணைப்பு வாகனத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக டிஜிபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று அறிவுறுத்தியுள்ளார்.
கோவை மாவட்டத்தின் சில இடங்களில் காலையில் இருந்தே பதட்டம் நிலவி வந்தது. சுமார் 19 அரசு வாகனங்களின் மீது கற்கள் வீசப்பட்டது.
துடியலூர், மேட்டுப்பாளையம், உப்பிலிபாளையம் ஆகிய இடங்களில் பதட்டம் அதிகமாக நிலவியது. இதையடுத்து கோவை மாவட்டம் முழுவதும் அரசு பஸ்கள் இயக்கம் தடை செய்யப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ளனர்.
கோவையில் உள்ள சுப்ரமணியம்பாளையத்தில் உள்ள வீட்டிற்கு நேற்று இரவு சென்று கொண்டிருக்கும்போது இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் சசிகுமாரை வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவரது உடம்பில் 11 இடங்களில் அரிவாள் வெட்டு காணப்பட்டது. கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
No comments:
Write comments