குஜராத்தில் இறந்த மாட்டை அப்புறப்படுத்த மறுத்த தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அங்கு மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் உனா மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு இறந்த மாட்டின் தோலை உரித்த போது மாட்டை வெட்டி கொன்றுவிட்டார்கள் என கருது பசுகாவலர்கள் நான்கு தலித் இளைஞர்களை கட்டிவைத்து சரமாரியாக தாக்கினர். இச்சம்பவம் அம்மாநிலம் முழுவதும் பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இனி தாங்கள் யாரும் இறந்த மாட்டினை அப்புறப்படுத்தப்போவதில்லை என ஒட்டுமொத்தமாக முடிவெடுத்தனர். மாநில அரசுக்கு எதிரான தலித்களின் போராட்டங்கள் வலுத்ததை அடுத்து, முதலமைச்சராக இருந்த ஆனந்தி பென் படேல் பதவி விலகினார்.
தற்போது இறந்த மாட்டை அப்புறப்படுத்த மறுத்த ஒரு தலித் குடும்பத்தினர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். பனாஸ்கந்தா மாவட்டத்தில் நடைபெற்ற இச்சம்பவம் அங்கு மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு இறந்த மாட்டை அப்புறப்படுத்துமாறு சிலர் அங்குள்ள தலித்களிடம் கூறியுள்ளனர். அதற்கு இரவு நேரத்தில் இதனை செய்ய முடியாது எனவும், நாளை வருகிறோம் என கூறி அவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிலர் வெள்ளிக்கிழமை நள்ளிரவு அந்த தலித் குடும்பத்தினரின் வீட்டிற்குள் புகுந்து மரக்கட்டைகளால் கடுமையாக தாக்கியதோடு இழிவாகவும் பேசியுள்ளனர். மேலும் அங்கிருந்த கர்பிணி பெண்ணின் வயிற்றிலும் தாக்குதல் நடத்தியுள்ளனர். மாட்டினை அப்புறப்படுத்த மறுத்தால் அவர்களை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர்.
இச்சம்பவம் நடைபெற்ற பிறகு அவர்கள் அனைவரும் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தலித்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை நட்வர்சிங், மக்னுசின்ஹா, நரேந்திரன், யோகி, பாபர்சின்ஹா, தில்கர் ஆகிய 6 நபர்களை கைது செய்துள்ளனர்.
No comments:
Write comments