கடந்த சில நாட்களுக்கு முன் தன் தொகுதியான கொளத்தூருக்கு விசிட் அடித்த ஸ்டாலின் அந்தப் பகுதியில் தண்ணீர் தேங்கும் இடங்களில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று மாநகராட்சிக்கு குட்டு வைத்தார். மேலும், இதுகுறித்த விரிவான ஆய்வறிக்கை ஒன்றையும் மாநகராட்சியில் சமர்ப்பித்தார். இந்நிலையில் ஸ்டாலின் நேற்று தனது சட்டமன்றத் தொகுதியில் மாநகராட்சி நூலகத்தை ஆய்வு செய்து நன்றாக செயல்படுவதாக பாராட்டி குறிப்பெழுதி வைத்துவிட்டு சென்றார். மு.க.ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு முதன்முறையாக போட்டியிட்டார். அப்போது அவரை எதிர்த்து போட்டியிட்டவர் சைதை துரைசாமி. போட்டி கடுமையாக இருந்ததால் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் ஸ்டாலின் வென்றார். இந்நிலையில் ஐந்தாண்டு காலம் தனது தொகுதியில் பல்வேறு பணிகளை செய்து தொகுதி மக்களின் அபிமானத்தை ஸ்டாலின் பெற்றார். தொகுதி மக்களைச் சந்தித்து பேசும் நிகழ்ச்சியே பின்னாளில் ‘நமக்கு நாமே’ பயணத்துக்கு அடிப்படையாக அமைந்தது. பல பணிகள் இருந்தாலும் ஸ்டாலின் தனது தொகுதிக்கு விசிட் அடிப்பதும் மக்கள் பிரச்னைக்காக கவுரவம் பார்க்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரடியாக பார்ப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார். இதன் விளைவாக கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற கடந்த ஐந்து மாதங்களில் தொகுதிக்கு பலமுறை சென்று மக்கள் குறைகளைக் கேட்டும் சில இடங்களில் சர்ப்ரைஸ் விசிட்டும் அடித்து சோதனை செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். தற்போது சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான நூலகத்தை பார்வையிட்டார். பின்னர் நூலக குறிப்பேட்டில் மாநகராட்சி நூலகம் சிறப்பாகச் செயல்படுவதாக குறிப்பெழுதி வைத்துவிட்டு சென்றார். தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சாதாரண மாநகராட்சி கிளை நூலகத்தை பார்வையிட்டு அதுபற்றி குறிப்பும் நல்லமுறையில் எழுதி வைத்துவிட்டு சென்றதைக் கண்டு, நூலக ஊழியர்கள் வியப்படைந்துள்ளார்கள்.

No comments:
Write comments