தமிழக அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்படாத பணியிடங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. ஏராளமான பட்டதாரிகள் வேலைவாய்ப்பின்றி வேலைதேடி அலைந்துகொண்டிருக்கும் நிலையில் அரசுத் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதில் ஏன் அரசு தயக்கம் காட்டுகிறது என்ற கேள்வி வேலைவாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்களிடமிருந்து எழுந்திருக்கிறது.
பள்ளிக் கல்வித்துறை
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின்கீழ் இயங்கும் கல்வித்துறை அலுவலகங்கள், அரசு தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்டவற்றில் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அலுவலக உதவியாளர்கள், வாட்ச்மேன்கள், பராமரிப்பாளர்கள் என ஏறக்குறைய 5,000 பேர்களுக்கான பணியிடங்களும் ஆய்வகங்களில் பணிபுரிய லேப் டெக்னீஷியன்கள் என சுமார் 1000 பேர்களும் ஆசிரிய, ஆசிரியைகள் ஏறக்குறைய 2,000 பேர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன.
உள்ளாட்சித் துறை
உள்ளாட்சித் துறைகளில் சாலை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள், கிராம மற்றும் பேரூராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து அலுவலகங்களில் கணக்காளர்கள், எழுத்தர்கள், உதவியாளர்கள் என ஏறக்குறைய 4,000 பேர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன.
மின்சாரத் துறை
மின்சாரத் துறையிலும் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், கணக்கீட்டாளர்கள், உதவியாளர்கள் என 2,000 பேர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன.
சுகாதாரத் துறை
சுகாதாரத் துறையின்கீழ் செயல்படும் கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் போன்றவற்றில் ஆண், பெண் நர்சுகள், கம்பவுண்டர்கள் மற்றும் மருந்தாளுனர்கள் உள்ளிட்டோருடன் சுத்தம் செய்யும் துப்புறவாளர்கள் என 3500 பேருக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன.
வீட்டுவசதி மற்றும் உயர்கல்வித் துறை
அரசு வீட்டுவசதித் துறையில் உதவிப் பொறியாளர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், டெக்னீஷியன்கள், அலுவலக உதவியாளர்கள், வரைவியலாளர்கள் என 1200 பேருக்கான பணியிட வேலைவாய்ப்புகள் நிரப்பப்படாமல் இருக்கின்றன.
அதேபோன்று, உயர்கல்வித் துறையில் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் மற்றும் லெச்சரர்கள் என 2000 பேருக்கான பணியிடங்கள் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் தொழில்நுட்ப கல்லூரிகளிலும் நிரப்பப்படாமல் இருக்கின்றன. மேலும் நெடுஞ்சாலைத் துறையில் சுமார் 400 இளநிலைப் பொறியாளர்கள் 500 சாலை ஆய்வாளர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. கால்நடைத் துறையில் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் என 600 பேருக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்
கிராமப்புறங்களிலும் நகராட்சிகளிலும் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் எடை போடும் எடையாளர்கள், ஆய்வாளர்கள், உதவியாளர்கள் என 600 பேர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. வருவாய்த்துறையில் கிராம நிர்வாக அலுவலர்கள், ஓட்டுநர்கள், உதவியாளர்கள் என 2500 பேர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. உணவு வழங்கல் துறையில் அதிகாரிகள், எழுத்தர்கள், உதவியாளர்கள் என ஏறக்குறைய 550 பேர்களுக்கான பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
வேளாண் துறை
வேளாண்மைத் துறையிலும் அதிகாரிகள், வேளாண் பொறியாளர்கள், ஓட்டுநர்கள், உதவியாளர்கள் என 1000 பேர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இப்படி அரசுத்துறையில் உள்ள பல்வேறு துறைகளில் பணியிடங்கள் அப்படியே இருக்கின்றன.
இந்தப் பணியிடங்களை நிரப்பப்படுவதில் உள்ள தயக்கம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன. சம்பந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்த அமைச்சர்களுக்கும் செயலர்களுக்கும் ஓர் இணக்கமான சூழல் இல்லாததே அரசுப் பணியிடங்கள் நிரப்புவதில் மெத்தனம் இருப்பதாக பல்வேறு தரப்பில் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்.
அதிகாரிகளும் அமைச்சர்களும் ஒத்த கருத்தோடு செயல்பட்டு, அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப முற்பட வேண்டும். இதனால், தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமான வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் பயன்பெறுவார்கள்.

No comments:
Write comments