திருநாவுக்கரசர் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக ஸ்டாலின் அவர் மீது கோபத்தில் உள்ள நிலையில், கடந்த இரு நாட்களாக திருநாவுக்கரசர் டெல்லியில் தங்கியிருந்து தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொருப்பாளர் முகுல் வாஸ்னிக்குடன் இணைந்து ராகுல்காந்தியைச் சந்தித்துப் பேசினார். நேற்று சோனியா காந்தியையும் சந்தித்தார். அதேநேரம் ராகுல், சோனியாவைச் சந்திக்க தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் டெல்லி சென்றார். ராகுலைச் சந்தித்தார் அந்தச் சந்திப்பு தொடர்பாக தனது ஆதரவாளர்களிடம் அவர் பேசும்போது “ திமுக தலைமையில் இருந்து காங்கிரஸ் தலைமைக்கு புகார் வந்திருக்கிறது. திருநாவுக்கரசரின் முரண்பாடான பேச்சுகள் கூட்டணிக்கு இடையே விரிசலை உருவாக்கி உள்ளது” என்று கூறியிருக்கிறார்.
இதனிடையே, பதவி தொடர்பான இன்னொரு விவகாரமும் இதோடு இணைந்து பயணிக்கிறது. அதாவது, காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர்களுள் ஒருவராக இருந்த திருநாவுக்கரசரைத்தான் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக்கியது தேசிய தலைமை. இப்போது, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஏதேனும் பதவியைக் கொடுத்தாக வேண்டிய நிலையில், முன்னர் திருநாவுக்கரசர் வகித்து வந்த தேசியச் செயலர் பதவியை இப்போது ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு வழங்க தேசிய தலைமை முடிவு செய்துள்ளது. இன்னொருபக்கம் காங்கிரஸ், திமுக இடையே நிலவும் முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வைத்து முயற்சிகள் நடைபெறலாம். இந்நிலையில், காவிரி தொடர்பாக நடந்த போராட்டங்களில் இரு கட்சிகளும் இணைந்து கலந்து கொள்ளாதது இரண்டு கட்சித் தொண்டர்களிடையே சலசலப்பை உருவாக்கியிருக்கிறது. இது தொடர்பாக, ஸ்டாலின் தரப்பு மாவட்டச் செயலாளர் ஒருவர், காங்கிரஸ் பிரமுகர்களிடம் கேட்ட போது “இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு திருநாவுக்கரசர் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. அதனால் கலந்து கொள்வதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே இந்தப் போராட்டங்களுக்கு எவரும் வரவில்லை” என்றிருக்கிறார். இதனால் ஸ்டாலின், திருநாவுக்கரசர் மீது கோபத்தில் இருந்தநிலையில் இன்று, புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த திருநாவுக்கரசர் “கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை” என்று கூறியிருக்கிறார். இதற்குக் காரணம், காங்கிரஸ் சார்பாக திருச்சியில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுக-வினர் யாரும் கலந்து கொள்ளவில்லை என்ற வருத்தம் திருநாவுக்கரசருக்கு இருந்து வருகிறது.

No comments:
Write comments