Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic Image and video hosting by TinyPic ஆன்லைன் ஊடகம் இணையதள சேவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் editor@onlineoodagam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Jan 17, 2017

வாழ்வை வாசித்து கழிப்போமா...?

Chennai book fair

சென்ற ஆண்டு ஜனவரியில் (2016) மழை வெள்ளத்தால் சென்னைப் புத்தகக் கண்காட்சி ஒத்திவைக்கப் பட்டது. பின்னர் 2016 மே மற்றும் ஜூனில் நடந்த கண்காட்சிக்கு குடும்பச் சூழலால் கலந்துகொள்ள இயலாமற் போய்விட்டது. இடைப்பட்ட காலத்தில் பாரதி புத்தகாலயம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ஆகியவற்றிடமிருந்து நேரடியாக நூல்களை வாங்க முடிந்தது.

தற்போது நடந்துகொண்டுள்ள புத்தகக் கண்காட்சிக்கு எப்படியும் சென்று தீருவது என்கிற முடிவோடு, தோழர் செ.மணிமாறன் அவர்களுடன் 08.01.2017 ஞாயிறு ஒருநாள் முழுக்கச் சுற்றிவந்து சில நூல்களை இருவரும் வாங்கி வந்தோம். தமிழகத்தின் இந்த பிருமாண்டமான கண்காட்சிக்கு ஒருநாள் போதுமா? என்ன செய்வது? வாழ்வுச்சூழல், குடும்பச் சிறை ஒருநாள் வழங்குவதே அரிதாகிவிட்டது.

கழிவறை உள்ளிட்ட ஆண்டுதோறும் தொடரும் துயர்கள் இன்றும் தொடர்கின்றன. நிரந்தரக் காட்சியிடமே இதற்குத் தீர்வாக அமையும். அவ்விடத்தில் புத்தகங்கள், கைவினைப் பொருள்கள், ஓவியங்கள், சிற்பங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் எனப் பல கண்காட்சிகளை நடத்த முடியும். இலக்கிய அரங்குகளை அங்கு நடத்தவும் வசதி கிடைக்கும். இது முடியாத காரியம் ஒன்றல்ல. ஆனால் அதற்கான உறுதிப்பாடு நமது ஆட்சியாளர்களிடம் இல்லை.

அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் புத்தகக் கண்காட்சி குறித்து தகவல்களை தினசரி அளிக்கின்றன. இது ஒருவகையில் விளம்பரம் போலவும் வாசகர்களுக்கு பயனுள்ளதாகவும், புதியவர்களை உள்ளேக் கொண்டுவரவும் உதவி புரியக்கூடும். வேந்தர் தொலைக்காட்சிக்காக புலம் அரங்கில் அப்பதிப்பகம் சார்பாக சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன். அது வேந்தர் செய்திகளில் ஒளிபரப்பானது. புதுச்சேரி அரசு செய்வதைப் போன்று 5% கழிவு அரசு வழங்க முன்வராத நிலையில் இந்த ஊடகப் பரப்புரையை பாராட்டத்தான் வேண்டும்.

நூல்களைத் தேடிப்பிடித்து வாங்கவும் நண்பர்களைச் சந்திக்கவும் இந்தக் கண்காட்சி ஒரு நல்வாய்ப்பாக அமையும். தோழர்கள் ஓடை.பொ.துரையரசன், ஷோபாசக்தி, க. நாகராஜன், சுந்தரபுத்தன், பாரதிதம்பி, சிவகுமார் முத்தய்யா, சியாம் சுந்தர், தேவநேயன், இனியன், வசந்த் ராஜா, தம்பி போன்றவர்களை சந்திக்கக் கிடைத்த வாய்ப்பு இனிமையானது.

உடல் நலிவுற்றிருக்கும் நிலையிலும் தோழர் நெடுவாக்கோட்டை உ.ராஜேந்திரன் அவர்கள் இயல்வாகை வெளியிட்ட ஜே.சி. குமரப்பாவின் ‘நிலைத்த பொருளாதாரம்’ நூலைக் கேட்டிருந்தார். முதலில் அதைத்தான் வாங்கினேன். அ.கி. வேங்கடசுப்பிரமணியன் மொழிபெயர்ப்பு. அப்படியே எனக்கும் ஒரு பிரதி.

சிறிய பதிப்பகங்கள் வெளியிடப்படும் நூல்களை இங்கு வாங்க முடியாத அவலம் தொடர்கிறது. முன்பு தோழர் பொதியவெற்பனின் ‘சிலிக்குயில்’ போன்ற அரங்குகளில் இத்தகைய அரிய நூற்கள் கிடைக்கும். இன்றைய வணிகமயச் சூழலில் குப்பைகள் எல்லாக் கடைகளிலும் கிடைப்பதே வாடிக்கையாகி விட்டது.

கண்காட்சியின் இறுதிநாள் வரையில் புதிய நூல்கள் வந்துகொண்டிருப்பது வாடிக்கையான ஒன்று. அதுவும் ‘வர்தா’ புயலின் பாதிப்பால் திட்டமிட்டபடி நூற்களை உருவாக்கச் சற்றுக் காலதாமதம் ஆகக்கூடும். மூன்றாவது நாளே நாங்கள் சென்றபடியால் கடைசி நேரத்தில் வெளியாகும் புத்தகங்களை தவறவிட்டோம் என்றே சொல்லவேண்டும்.

வழக்கம் போல பாரது புத்தகாலயம் தோழர் சிராஜ், புலம் லோகநாதன் ஆகியோர் உதவியுடன் புத்தகங்களை வாங்குக் குவித்து அங்கேயே அட்டைப் பெட்டியில் அடைத்து பார்சல் மூலம் அனுப்பச் சொல்லிவிட்டு ஊருக்குக் கிளம்பினோம். புத்தகங்களை வாங்கும் தருணங்களும் அது மீண்டும் நம் கைகளில் தவழ்வதும் ஒரு குழந்தையைப் போல இருப்பது கொள்ளை அழகு. வேறு யாருடன் உரையாடுவது? இவைகளுடன் தான் நமது உரையாடல் தொடர்கிறது.

வாசிக்க வேண்டிய புத்தகங்களின் சுமை ஆண்டுக்கு ஆண்டு கூடிக் கொண்டே செல்கிறது. எல்லாவற்றையும் வாசித்துத் தொலைக்க வேண்டும். சாவதற்குள் வாசித்துவிட மாட்டோமா என்ற ஏக்கம் ஒருபுறம் இருக்கத்தான் செய்கிறது. வாழ்வை வாசித்துத்தான் கழிக்கவேண்டும். 

நன்றி: மு. சிவகுருநாதன்

Dec 21, 2016

தேமுதிக : வளர்ந்ததும் - வீழ்ந்ததும்...


தமிழகத்தை 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இரு திராவிட கழகங்களுக்கு மாற்றாக ஒரு அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்பது நீண்டகால கனவு பலருக்கு. இதற்கான முயற்சிகளில் பல தலைவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். காங்கிரஸ், மதிமுக, பாமக, தேமுதிக, பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல கட்சிகளும் தேர்தல் களங்களில் தங்களை இரண்டிற்கும் மாற்றாக அறிவித்துக்கொண்டு களமாடி இருக்கின்றன.

இதில் தேமுதிக மட்டுமே தனித்துவமாக நின்று வென்று காட்டியது. அதன் அசுர வளர்ச்சி இரு கழகங்களுக்கு கிலியை ஏற்படுத்தின. தேமுதிகவின் தோற்றமும், பயணமும் பல இளைஞர்களை ஈர்த்தது. "அன்னை தமிழ் காப்போம், அனைத்து மொழிகளையும் கற்போம்" என்ற கொள்கை பிரகனத்தோடும், அரசியலில் தூய்மை, நாணயம், மனிதநேயம் ஆகியவற்றை கடைபிடித்து வறுமைக்கோட்டிற்குகீழ் மக்களே இல்லை என்கிற நிலையை உருவாக்கப்பாடுபடுவது" என்பதினை லட்சியமாகவும் கொண்டு 2005 ம் ஆண்டு செப்டம்பர் 14 ம் தேதி மதுரையில் லட்சக்கணக்கான தொண்டர்களுடன் தொடங்கப்பட்டது தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக). 

துவங்கப்பட்ட ஒரு வருடத்திலேயே 2006 சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது. அரசியல் அனுபவமற்ற நடிகர் விஜயகாந்த் அவர்களின் ரசிகராக மட்டுமே அறியப்பட்ட தொண்டர்களை வைத்துக்கொண்டு இவர் என்ன சாதித்து விடப்போகிறார் என பலரது ஏளனங்களுக்கு மத்தியில் இக்கட்சி அத்தேர்தலில் வாங்கிய வாக்குகள் தமிழகத்தில் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தின. பலரது புருவங்களை உயர்த்தின. அத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 8.4% வாக்குகளை பெற்றதோடு மட்டுமில்லாமல் விஜயகாந்த் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்தெடுக்கப்பட்டார். தேமுதிக சார்பில் அவர் ஒருவர்தான் வெற்றிபெற்றார் என்றாலும் அவரது கட்சி வாங்கிய வாக்குகள் பலரையும் பிரமிக்க வைத்தது.

அதிமுக தோற்பதற்கும், திமுக வரலாற்றில் இல்லாத வகையில் தனி மெஜாரிட்டி ஆட்சியாக அமையாமல் போனதற்கும் தேமுதிகவே முதற்காரணம். இரு கழகங்களுக்கு மாற்றாக ஒரு கட்சி பரிணமிக்க வேண்டும் என்று எண்ணிய பலருக்கு இது உற்சாகத்தை கொடுத்தது. நம்பிக்கையை விதைத்தது. பண்ருட்டி ராமச்சந்திரன், குமரி ஆஸ்டின், சி.ஆர்.பாஸ்கரன், கு.ப.கிருஷ்ணன் போன்ற பல தலைவர்களின் வருகை தேமுதிகவுக்கு கூடுதல் பலத்தை கொடுத்தது. துரதிஸ்டவசமாக அவர்களை தக்க வைக்க விஜயகாந்தால் முடியவில்லை.

2009 நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்தே நின்றது தேமுதிக. கடந்த தேர்தலைவிட கூடுதலாக 2% வாக்குகளை பெற்று 10% என தனது வாக்கு வங்கியை உயர்த்தியது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 1,32,223 வாக்குகளும், குறைந்தபட்சமாக பொள்ளாச்சியில் 38,824 வாக்குகளும் பெற்றது சாதாரணமானவை அல்ல. பத்தாயிரம் வாக்குகள் பெறுவதற்கே பல கட்சிகள் திண்டாடி வருவதை இன்றும் பார்த்துதான் வருகிறோம். தேமுதிக பெற்ற வாக்குகள் திமுகவை விட அதிமுகவை அதிகம் பாதித்தன. மும்முனை போட்டியால் அதிமுகவே இழப்பை சந்தித்தது. 2006, 2009 தேர்தல் முடிவுகளை உற்றுநோக்குபவர்களுக்கு இது நன்கு தெரியும். அதிலும் 2009 நாடாளமன்றத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக ஈழப் பிரச்சனையில் துரோகம் இழைத்துவிட்டதாக மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் நடைபெற்றும் அக்கூட்டணியே பெரும்பான்மை இடத்தில வெற்றிபெற்றது. இதற்கு தேமுதிக தனித்து பெற்ற 10% வாக்குகளே காரணமாகும். 

தேமுதிக இல்லாமல் வெற்றிபெற முடியாது என்பதை நன்கு உணர்ந்துகொண்ட அதிமுக அந்த கட்சியை கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கு பலரது மூலம் பகீரத முயற்சிகளை செய்தது. அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. முதலில் தயங்கிய விஜயகாந்த் பின்னர் ஒப்புக்கொண்டார். 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று 41 சீட்களை பெற்றது தேமுதிக. 

யாருக்கும் அள்ளிக்கொடுத்திடாத செல்வி. ஜெயலலிதா தேமுதிகவுக்கு 41 சீட்களையும், கேட்ட தொகுதிகளையும் கொடுத்தது பலருக்கு ஆச்சரியம் அளித்தது. அதற்கு தேமுதிக இல்லாமல் வெற்றிபெற முடியாது என்ற அன்று நிலவிய யதார்த்த நிலைதான் காரணம். 41 ல் போட்டியிட்டு 29 இடங்களை வென்று பிரதான எதிர்க்கட்சியாக தேர்வு பெற்றது தேமுதிக. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவரானார். கட்சி துவங்கிய குறுகிய காலத்திற்குள்ளாகவே எதிர்க்கட்சி தலைவர் ஆகியது பெரிய வெற்றி என்றே பலரும் மதிப்பிட்டனர். ஆனால் தேமுதிகவின் இன்றைய அடிசறுக்கிற்கு முதற்காரணம் அதுதான்.  

இரண்டு ஊழல் கழகங்களுக்கும் மாற்றாக தன்னை முன்னுறுத்திய விஜயகாந்த் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தது பலராலும் ரசிக்கப்படவில்லை. அது அந்த தேர்தலிலேயே எதிரொலித்தது. 29 இடங்களில் வென்றாலும் முன்னைவிட அதன் வாக்குவங்கி குறைந்துபோனது. மாற்றை தேடிய இளைஞர்கள் தேமுதிகவைவிட்டு சிறிது சிறிதாக வெளியேற துவங்கிய காலம் அது. அதன் பின்னும் ஒரு நல்ல வாய்ப்பை காலம் அவருக்கு வழங்கியது. எதிர்க்கட்சி என்கிற மக்கள் கொடுத்த அந்த பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு தேமுதிகவை நன்கு வளர்த்திருக்கலாம். தன்னை சிறந்த செயல்பாட்டாளனாக நிரூபித்திருக்கலாம். இந்த அருமையான ஒரு வாய்ப்பை தவறவிட்டார் விஜயகாந்த். இன்று எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் செய்யும் அரசியலைக்கூட அவர் முன்னெடுக்கவில்லை. அதிமுக அரசுடன் கடுமையான மோதல் போக்கை கையாண்டார். அதனால் தேமுதிகவை உடைக்கவும், பலவீனப்படுத்தவும் அதிமுக முயன்று அதில் வெற்றியும் கண்டது. அந்த ஐந்து வருடத்தில் மட்டும் விஜயகாந்த் மீது 28 அவதூறு வழக்குகள் பதிவு செய்து முடக்கியது அதிமுக அரசு. அவரது கட்சினர் மீதும் பல வழக்குகளை தொடுத்தது. இது போதாதென்று விஜயகாந்த் பொதுஇடங்களில் நடந்துகொள்ளும் செயலால் பலரையும் முகம் சுளிக்க வைத்தார். அவர் மீதான ஈர்ப்பு பொதுமக்களிடம் குறைந்துகொண்டே வந்து இன்று பலரின் ஒருவராக உட்கார வைத்துவிட்டது. அதேபோல் கூட்டணிக்காக அவர் பேசும் கடுமையான பேரம் நடுநிலையான பலரையும் தேமுதிகவிற்கு எதிராக சிந்திக்க வைத்துவிட்டது.

"கேப்டன் செய்த ஒரே தவறு 2011 ம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்ததுதான்" என்று அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் குறிப்பிட்டார். அது மறுக்க முடியாத உண்மை. அன்று மட்டும் அதிமுகவுடன் கூட்டணி சேராமல், சிலரது திட்டங்களில் சிக்காமல் 'துணிந்து' தனித்து போட்டியிட்டிருந்தால் இன்று செல்வி. ஜெயலலிதாவின் மறைவினால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை தேமுதிக சரியாக பயன்படுத்தி இருக்க முடியும். அதிமுக கூட்டணிக்காக விஜயகாந்தை உயர்த்தி பிடித்த ஊடகங்கள்கூட அதிமுக ஆட்சியை பிடித்தவுடன் தேமுதிகவை விமர்ச்சிக்க ஆரம்பித்தன. அவரை செல்லாக்காசாக்க துடித்தன. சில அறிவுஜீவிகளும்தான்.

விஜயகாந்த் தனக்கு பின்னப்படும் சதிகளை அறியாமல் பலரது பேச்சை கேட்டு செய்த தவறையே மீண்டும் மீண்டும் செய்தார். 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணில் அவரை சேர்க்க பெரும் முயற்சியை பலர் எடுத்தனர். அவர்மீது நல்ல எண்ணம் கொண்ட சிலர் அதை தடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். தேமுதிகவில் சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர்கள் பெருமளவில் இருப்பதால் பாஜக கூட்டணியில் சேர்ந்தால் அவர்களை இழக்க வேண்டி வரும் என்றுகூட பேசினார்கள். இதெற்கெல்லாம் மசியவில்லை அவர். இறுதியில் பாஜக கூட்டணியில் இணைந்தார். தேமுதிகவின் கூட்டணி மூலம் கூட்டணி கட்சிகள் நன்கு பயன்பெற்றன. குமரியில் பாஜகவும், தர்மபுரியில் அன்புமணியும் வெற்றிபெற்றார்கள். ஆனால் 14 இடங்களை கடுமையான பேரம் பேசி வாங்கி போட்டியிட்ட தேமுதிக ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. வாக்கு வங்கியும் வெகுவாக குறைந்தது. அதிலாவது அவர் சுதாரித்திருக்க வேண்டும். மாறாக அவர் சுதாரிக்கவில்லை.

2016 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்று பெரும் பட்டிமன்றமே நடைபெற்றது. திமுகவுடனும், பாஜவுடனும், மக்கள் நலக்கூட்டணியுடனும் என அனைத்து பக்கமும் பேரம் பேசியது தேமுதிக. ஒரே நேரத்தில் மாறுபட்ட கொள்கையுடைவர்களுடன் கூட்டணி பேச விஜயகாந்தால் மட்டுமே முடியும் என்கிற அவப்பெயரை கொடுத்தது அது. கூடவே தேமுதிகவின் கொஞ்சநஞ்ச நம்பகத்தன்மையையும் குழிதோண்டி புதைத்து. தன்னை முதல் அமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டதால் ஒரு வழியாக மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்தித்தார் விஜயகாந்த். அத்தேர்தலில் தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி படுகேவலமான இடத்தை பெற்றது. டெபாசிட்கூட பெறமுடியாத தோல்வி அது. தேமுதிக 104 இடங்களில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் மண்ணை கவ்வியது. உளுந்துர்பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்த டெபாசிட் பெறமுடியாமல் படுதோல்வி கண்டார். தேமுதிகவின் வாக்கு வங்கி 2.4% என அதலபாதாளத்திற்கு சென்றது. "2016 சட்டமன்ற தேர்தலோடு தேமுதிகவின், விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும்" என்று 2011 ல் அதிமுக-தேமுதிக கூட்டணி ஏற்படவும், 2014 ல் பாஜக-தேமுதிக கூட்டணி ஏற்படவும் பெரும் முயற்சி எடுத்த தமிழருவி மணியன் ஒரு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் குறிப்பிட்டார். ஏறக்குறைய அது நடந்து வருவதாகத்தான் கருத வேண்டி இருக்கிறது.

தொடர் தோல்விகளால், விஜயகாந்தின் செயல்பாடுகளால், அவரது குடும்பத்தினரின் தலையீடுகளாலும் வெறுப்புற்ற நிர்வாகிகள் பலர் தொடர்ச்சியாக விலகி வருகின்றனர். ஆரம்ப காலங்களிலிருந்து விஜயகாந்த் உடன் இருந்தவர்கள்கூட "எங்கள் பேச்சை கேட்க மறுக்கிறார்" என்று குற்றம் சுமத்துகிறார்கள். தேமுதிகவிற்கு இது ஒரு இக்கட்டான சூழல். தொண்டர்களை தக்க வைக்க வேண்டும். இழந்த தனது செல்வாக்கை மீண்டும் பெற வேண்டும். அதற்கான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். அதை நோக்கி செயல்பட வேண்டும். இப்படி எத்தனையோ சவால்கள் அதன் முன் உள்ளன.

சமீபத்தில் நடைபெற்ற மூன்று தொகுதி இடைதேர்தல்களில் தொண்டர்களை உற்சாகப்படுத்த தனித்து நிற்கும் முடிவை தேமுதிக எடுத்தது. ஆனால் அதுவும் பெரிய அளவில் பயன்தரவில்லை. எதிர்வினையாற்றிவிட்டது. போட்டியிட்ட மூன்று இடங்களிலும் கடுமையான பின்னடைவை சந்தித்தது. மூன்று தொகுதிகளையும் சேர்த்தே 7152 வாக்குகள்தான் பெற்றது. 1.3% வாக்குதான். பாஜக கூட 2.5% வாக்குகளை பெற்றிருக்கிறது. இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சிதான் வெற்றிபெறும் என்றாலும் தனது வாக்கு வங்கியாவது தக்கவைத்திருக்க வேண்டும். இந்த இடைத்தேர்தலில் திமுக தோல்வியடைந்தாலும் 37.8% வாக்குகளை பெற்று தனது வாக்கு வங்கியை நிலைநிறுத்தி இருக்கிறது. இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஒரு அறிக்கையில் "வெற்றிகளும், தோல்விகளும் மனித வாழ்வில் எல்லோருக்கும் ஒவ்வொரு காலகட்டத்தில் நடப்பவை" என்று விஜயகாந்த் தெரிவித்திருந்தார். அது முற்றிலும் உண்மை என்றாலும் அரசியலில் வெற்றி தோல்விகளை தாண்டி தனது தொண்டர்களை தக்கவைப்பது முக்கியமானது. இதில்தான் தேமுதிக பெரிய அளவில் சறுக்கி இருக்கிறது. சரிந்து வருகிறது.

"முடிவுகளை விஜயகாந்த் எடுத்த வரை கட்சி நல்லாயிருந்தது. அவரின் மனைவி, மைத்துனர் எப்போது அதில் தலையிட ஆரம்பம் செய்தனரோ அன்றே கட்சி வழி தவறி செல்ல ஆரம்பித்துவிட்டது" என தேமுதிக தொண்டர்கள் வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்கள். 

தேமுதிகவை மீண்டும் வலுப்படுத்த விஜயகாந்த் நினைத்தால் அவர் முதலில் செய்ய வேண்டியது தனது தொண்டர்களின் மனக்குமறல்களுக்கு செவிமடுக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று நிர்வாகிகளை சந்திக்க வேண்டும். மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு போராடும் வகையில் கட்சியை தயார்படுத்த வேண்டும். பணம் இருப்பவர்களே நிர்வாகிகள், வேட்பாளர்கள் என்ற நிலையை மாற்ற வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக தனித்து இயங்கும் வகையில் தனது உடல்நலத்தில் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.

- வி.களத்தூர் எம்.பாரூக்

Nov 29, 2016

பிரதமர் மோடி நம்பிக்கையைக் காப்பாற்றுவாரா அல்லது மாறு செய்வாரா?

"கோடிக்கணக்கில் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடுவேன்", "கருப்புப் பணத்தை நூறு நாட்களில் மீட்பேன்" இதுபோன்ற எண்ணற்ற வாக்குறுதிகளை 2014 தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி அளித்தார்.
modi 285லஞ்சத்தாலும், ஊழலாலும், அரசியல்வாதிகளின் நடத்தையாலும் வெறுப்புற்று இருந்த மக்கள் மோடியின் கூற்றிற்கு செவிமடுத்தனர்; ஆதரித்தனர். விளைவு அசுர பலத்துடன் பாஜக ஆட்சிக்கு வந்தது. காங்கிரஸ் அல்லாத ஒரு அரசு தனி மெஜாரிட்டியுடன் ஆட்சிக்கு வந்தது இதுவே முதல்முறை. அதற்குக் காரணம் பிரதமர் மோடி, அவரின் பிரச்சாரம். சாத்தியமோ, இல்லையோ வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அதனால் பயனும் பெற்றார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது "24 லட்சம் கோடி கருப்புப் பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கிறது. அதை மீட்டுக் கொண்டுவந்தால் இந்தியா வல்லரசாக மாறிவிடும்" என்று பேசிய பாஜக வினர் ஆட்சிக்கு வந்தவுடன் கருப்புப் பணம் பற்றி கேள்வி எழுப்பினாலே எரிச்சல் அடைந்தனர்.
இது குறித்து பிரதமர் மோடியிடம் செய்தியாளர்கள் வினவ "கருப்புப் பணம் வெளிநாடுகளில் எவ்வளவு இருக்கிறது என்பது எனது அரசுக்குத் தெரியாது; முந்தைய அரசுக்கும் தெரியாது; ஏன் யாருக்கும் தெரியாது" என்று பதிலளித்தார். ஆனால் எதன் அடிப்படையில் வெளிநாடுகளில் 24 லட்சம் கோடி கருப்புப் பணம் பதுக்கப்பட்டிருப்பதாக சொன்னார் என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை.
நிதியமைச்சர் அருண்ஜெட்லி "கருப்புப் பணத்தை மீட்பது சுலபமல்ல; அதற்கு சில காலம் ஆகும்" என்று முன்பு காங்கிரஸ் அரசு சொன்னவற்றையே தொடர்ந்து கூறி வந்தார். கருப்புப் பணம் மீட்பதற்கு இடையில் கொண்டு வரப்பட்ட திட்டங்களும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. இதனால் கருப்புப் பணத்தை மீட்பதில் மோடியின் நம்பகத்தன்மை குறைந்து கொண்டே வந்த நேரத்தில்தான் பிரதமர் மோடி புதிய அறிவிப்பை வெளியிட்டார்.
நவம்பர் 08 இரவு 08 மணியளவில் இந்தியாவின் உயர்மதிப்புப் பணமான ரூ. 500, ரூ. 1000 செல்லாது என்று தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு அறிவிக்கிறார். "இந்த இரவு கருப்புப் பணம் பதுக்கியவர்களுக்கு தூக்கம் வராது. அடித்தட்டு மக்கள் நிம்மதியாக தூங்குவார்கள்" என்று அந்த அறிவிப்பினூடே தெரிவித்தார்.
ஆனால் அவர் அறிவிப்பிற்கு மாறாக தூக்கம் தொலைத்தவர்கள் சாதாரண அடித்தட்டு மக்கள்தான் என்பதை வங்கி முன்பும், பணம் எடுக்கும் இயந்திரத்தின் முன்பும் மறுநாள் முதல் காண முடிந்தது. சிறிது சிறிதாக சேர்த்து வைத்திருந்த பணமெல்லாம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் பலரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். மருத்துவ சிகிச்சைக்கு சென்றவர்கள், திருமணம் வைத்திருந்தவர்கள் என சகலரும் பாதிக்கப்பட்டனர்.
ரூ. 500, ரூ. 1000 செல்லாது என்ற அறிவிப்பில் வேகம் காட்டிய அரசு அதற்கு மாற்று ஏற்பாட்டில் சுணங்கி நின்றது. புதிய நோட்டுகளை தயார் நிலையில் வைக்கவில்லை. அதனால் பொதுமக்கள் பணம் மாற்றுவதற்குக்கூட கடுமையான சிரமங்களை எதிர்கொண்டனர். பணம் மாற்றுவதில் உள்ள சிரமத்தினால் இதுவரை 65க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இறந்துள்ளனர். 25-11-2016 அன்று மட்டும் ஒரு பெண் உட்பட 3 பேர் இறந்துள்ளனர். இந்த 17 நாட்களில் 14 வங்கிப் பணியாளர்கள் பணிச்சுமையால் இறந்துள்ளனர். 90% ATM-கள் வேலை செய்யவில்லை. வங்கிக்கு உரிய முறையில் பணம் வரவில்லை.
வங்கியில் தரும் புதிய ரூ. 2000 நோட்டுகளுக்கு வெளியில் சில்லறை கிடைக்கவில்லை. வங்கியில் கிடைக்கும் குறைந்தபட்ச பணமும் போதவில்லை. முதலில் 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்காமல் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடித்தது என பல்வேறு நடைமுறை சார்ந்த விஷயங்களைக் காணும்போது இந்த அரசின் செயல்பாட்டு தோல்வி அப்பட்டமானது.
இந்த அரசின் முன்யோசனையில்லாத இந்த நடவடிக்கையைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றன. "இந்த நடவடிக்கையால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அவர்களுக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், பாராளமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும், ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்து விதி அவை 56 ன் கீழ் வாக்களிப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும்" என பல கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன.
இதுவரை ரூ. 5 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகிறார். இவைகளில் பெரும்பகுதி பணம் ஏழை எளிய மக்கள் உழைத்து சேமித்தவையாகும். ஆனால் பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்களும் இந்த ரூ. 5 லட்சம் கோடியும் கருப்புப் பணம், அதை எப்படி மீட்டோம் பாருங்கள் என்பது போல பேசி வருவது கண்டிக்கத்தக்கதாகும். இதன்மூலம் அவர்களின் தோல்விகளை மறைக்க முயல்கிறார்கள்.
2016 ம் ஆண்டின் தகவலின்படி இந்தியாவில் புழங்கும் பணத்தின் மதிப்பு ரூ. 17 லட்சம் கோடி . இதில் ரூ. 500 - 45%, ரூ. 1000 - 39% பங்கு வகிக்கிறது. சுமார் 80% மேற்பட்ட நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த அரசு அதற்கு ஈடாக புதிய நோட்டுகளை அச்சடித்து இருக்க வேண்டும். மாறாக தற்போதுதான் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அவசர அவசரமாக அச்சடிக்கப்படுவதால் 500 ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் மட்டுமே பிரிண்ட் அச்சாகியுள்ளதாக பல இடங்களில் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. "பிரதமர் மோடியின் அறிவிப்பால் கள்ள நோட்டு ஒழிக்கப்படும், தீவிரவாதிகளின் பணப்பரிமாற்றம் தடைபடும், கருப்புப் பணம் கட்டுக்குள் வரும், நாட்டின் பொருளாதாரம் மேம்படும்" என்று பாஜகவினர் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
கள்ள நோட்டு எவ்வளவு புழக்கத்தில் இருக்கிறது என்பதை பலரும் பலவிதமாக சொல்லி மக்களை குழப்புகிறார்கள். "ரூ. 17 லட்சம் கோடியில் ரூ. 400 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருக்கிறது" என்று தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) தெரிவிக்கின்றது. நோட்டுகளின் எண்ணிக்கையையும், அதன் மதிப்பையும் சிலர் ஒன்றாக நினைத்து குழப்பிக் கொள்கின்றனர்.
ஒரு லட்சம் கள்ள நோட்டு, மூன்று லட்சம் கள்ள நோட்டு என்று சொல்வதால் பல லட்சம் கோடிக்கு கள்ளப்பணம் இருப்பதாக நினைத்துக் கொள்கின்றனர். அது தவறு. உதாரணத்திற்கு: "2015 ம் ஆண்டு ரிசர்வ் வங்கி 6,32,000 கள்ள நோட்டுகளை கைப்பற்றியுள்ளது. அதன் மதிப்பு ரூ. 30.43 கோடி". அவ்வளவுதான். தற்போது புழக்கத்தில் இருக்கும் கள்ள நோட்டுகளின் சதவீதம் 0.028 தான். "கள்ளப்பணத்தை ஒழிப்பதாக கூறிக்கொண்டு நல்ல பணத்தை ஒழித்து விட்டார்கள்" என்று ப.சிதம்பரம் கூறுவதும் இதன் அடிப்படையில்தான்.
புதிய ரூ. 2000 பல பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சடிக்கப்பட்டுள்ளது. யார் நினைத்தாலும் இதில் கள்ள நோட்டு அடிக்க முடியாது என்று பலரும் பேசிவந்த நேரத்தில் கள்ள நோட்டு பற்றிய செய்திகள் ஊடகங்களில் தொடர்ந்து வெளிவர ஆரம்பித்திருக்கின்றனன. புதிய ரூ. 2000 புழக்கத்தில் வந்த இரண்டு நாட்களிலேயே பெங்களூரில் கள்ள நோட்டு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
கர்நாடகாவில் பிரிண்டரில் அச்சடிக்கப்பட்ட போலி ரூ. 2000 நோட்டுகளைக் கொடுத்து ரூ. 1700 க்கு பொருட்கள் வாங்கப்பட்டிருக்கின்றன. பஞ்சாபில் போலி ரூ. 2000 அச்சடித்த கடை உரிமையாளர்கள் சந்திப் குமார், ஹர்ஜித்சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். திருவண்ணாமலையில் டாஸ்மாக் கடையில் போலி ரூ. 2000 கொடுத்து ரூ. 300 க்கு சரக்கு வாங்கி மீதி சில்லறை வாங்க்ச் சென்றுள்ளனர். கேரளா மாநிலம் திருச்சூரில் 13 வயதான சிறுமி போலி ரூ. 2000 கொடுத்து கடையில் ரூ. 500 பொருட்கள் வாங்கியுள்ளார்.
இதுபோன்ற செய்திகள் அதிர்ச்சி தருகின்றன. புதிய 2000 ரூபாய் புழக்கத்தில் வந்த சில நாட்களிலேயே போலி நோட்டுகளும் புழக்கத்தில் வர ஆரம்பித்துள்ளன. பிரதமர் மோடி ஆற்றை சுத்தப்படுத்துவதற்கு ஆற்றில் கலக்கும் கழிவு நீரின் வழியை அடைக்காமல் ஆற்றுத் தண்ணீரை மட்டுமே மாற்றி இருப்பதாகவே தெரிகிறது. புதிய தண்ணீரை நிரப்பினாலும் அதில் கலக்கும் கழிவுநீரால் புதிய நீரும் அசுத்தம் ஆகவே செய்யும் என்பதை அவர் கணக்கில் எடுக்கத் தவறிவிட்டார்.
"இந்த முடிவால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதத்திலிருந்து 3.5 சதவீதம் ஆக வீழ்ச்சியடையும்" என்று ஆம்பிட் கேபிடேல் என்ற நிறுவனம் மதிப்பிட்டிருக்கிறது. பணம் கையிருப்பில் இல்லாத காரணத்தால் பெரும்பாலான வியாபார நிறுவனங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. தொழிலாளர்களும் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். இதெல்லாம் இந்த அறிவிப்பினால் ஏற்படும் நன்மையை விட அதிக பாதிப்பை தரக்கூடியது. பெரும்பாலான பொது மக்களும் இந்த அரசின் முன்யோசனை இல்லாத இச்செயலை வெறுப்புடனேயே கண்டு வருகிறார்கள்.
அதை உணர்ந்துகொண்ட பிரதமர் மோடி ஆக்ராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது "இந்தத் திட்டத்தை அவ்வப்போது ஆய்வு செய்து தேவையான மாற்றங்களை செய்வேன்" என்று உறுதி கூறியிருக்கிறார்.
இந்தத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்யாமல், மக்களின் சிரமங்களைப் போக்காமல் காலம் தாழ்த்தினால் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளதுபோல நாட்டில் "கலவரச்சூழல்" உருவாகும் நிலை ஏற்படும்.
மயிலாப்பூரில் ATM-ல் பணம் வரவில்லை என்பதற்காக அந்த இயந்திரத்தை இளைஞர் ஒருவர் அடித்து உடைத்துள்ளார். பல இடங்களிலும் வங்கி ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதங்கள் அதிகரித்திருக்கின்றன போன்ற செய்திகளை பார்க்கும்போது உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தின் தீவிரம் தெரிகிறது..
மாநிலங்களவையில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் "மத்திய அரசின் நடவடிக்கை திட்டமிட்ட, சட்டப்பூர்வமான ஒரு கொள்ளை, திருட்டுதான். இனியேனும் இந்த தேசத்தின் ஏழைகளின் துயரத்திற்கு தீர்வுகாண நல்ல முடிவுகளை பிரதமர் எடுப்பார் என நம்பிக்கையோடு இருக்கிறோம்" எனக் குறிப்பிட்டார்.
அது அவரின் நம்பிக்கை மட்டுமல்ல. தனது பணத்தை மாற்றுவதற்கு பல்வேறு இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் நம்பிக்கை. பிரதமர் மோடி அதைக் காப்பாற்றுவாரா அல்லது மாறுசெய்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- வி.களத்தூர் எம்.பாரூக்

Nov 5, 2016

சேரிகளின் தேசம் இந்தியா...!

விண்ணுக்கு இருபது செயற்கைகோள்களை ஒரே நேரத்தில் அனுப்பும் வல்லமை மிக்க நாடாக உலக அரங்கில் வீர நடைபோடும் இந்தியா, கடந்த கால் நூற்றாண்டில் பல துறைகளில் சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக ஏவுகனை தொழில் நுட்பம், ஆஸ்கர் விருது, மின்னஞ்சல் கண்டுபிடிப்பு, உலக பணக்காரர்களின் பட்டியலில் இந்தியர்கள், அணு ஆயுத சோதனை வெற்றி,  பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகள் இந்தியாவிற்கு வந்தது, இந்திய வம்சாவளியினரின் சாதனை, விளையாட்டு வீரர்களின் உலக சாதனைகள் ஆகியன கடந்த கால் நூற்றாண்டில் நடந்தவை.

உலக நாடுகளிடையே வல்லரசு நாடுகளுக்கு இணையாக மார்தட்டிக் கொள்ளும் இந்தியாவின் பெருமை ஒருபக்கம் இருக்க, மறுபக்க அதன் கருப்புப்பக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

இந்தியாவின் கருப்பு பக்கங்களில் முதல் பத்து இடத்தில் தனக்கெனத் தனி இடத்தைப் பெற்றிருப்பது சேரிகள் தான். எந்த இடம் வாழ்வதற்குத் தேவையான போதிய இட வசதி, தூய்மையான காற்று, சுகாதார வசதி, குடி நீர், கழிப்பறை, மின் வசதி ஆகியன இல்லாதிருக்கின்றதோ அது தான் சேரி. கழிவுகளுக்கு மத்தியில் அமர்ந்து உணவு உட்கொள்ளும் மக்கள், குறுகிய வீட்டில் அதிகமாக மக்கள் வசிப்பது, சாக்கடைகள் மீது ஓடி விளையாடும் குழந்தைகள், சுகாதாரமற்ற குடி நீர், பொது இடத்தில் சுயதேவைகளை நிறைவேற்றும் மக்கள் நிறைந்திருக்கும் இடம் தான் சேரி.

உலகின் மிகப்பெரிய சேரி, ஆசியாவின் பிரம்மாண்டமான அளவுக்கு மக்கள் அதிகம் வசிக்கும் சேரி என்ற பெயர் பெற்றிருப்பது மும்பை மாநகரத்தில் உள்ள தாராவி சேரிதான். இதில் பெருமைப்பட ஒன்றும் இல்லை. சேரிகள் நமது நாட்டின் நவீனகால சிறைக்கொட்டகையாகவும், தீண்டாமைக்கு எடுத்துக்காட்டாகவும் இருக்கின்றன. மனிதர்கள் வாழத்தகுதியில்லாத இடத்தில் பல ஆண்டுகளாக வாழும் இம்மக்களைப்பற்றியும் அங்குள்ள நிலையை பற்றியும் செய்தித்தாள்கள் மூலம் அறிந்திருப்போம். ஆனால் அது நம்மை ஒரு செய்தியாகக் கடந்து சென்றிருக்குமே தவிர, அவர்களுடைய மறுவாழ்வு பற்றி நாம் சிந்தித்து இருக்க மாட்டோம்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தகவல் தொழில் நுட்பமும், தொழிற்சாலைகளும் செழித்து கிடக்கும் மும்பை மாநகரத்தின் நடுவே கருப்பு மையமாக இருப்பது தாராவிதான். தாராவியை தவிர அதனைச் சுற்றி இருக்கும் அனைத்து இடங்களும் வானளாவ கட்டிடங்களையும் பரபரப்பான மக்களையும் கொண்டிருக்கிறது.

ஆடம்பர வாழ்க்கையில் மூழ்கி இருக்கும் மக்கள் தாராவி வழியே செல்லும் போது மூக்கை மூடிக்கொண்டும், அந்த இடத்தைப் பார்க்க விரும்பாமல் செல்லும் நிகழ்வுகளும் வழக்கமானவை.

அப்படி என்னதான் அந்த தாராவியில் இருக்கிறது? அங்குள்ள மக்களின் நிலை என்ன? என்பதை அறிய தாராவியில் நுழைந்தோம். முதலில் நம் கண்ணுக்குத் தென்படுவது குறுகிய வீதிகளும், அதனை ஒட்டி அமைந்துள்ள சிறிய சிறிய வீடுகளும், பரபரப்பாக தங்களின் வேலைகளின் ஈடுபட்டிருக்கும் ஆண்களும், வீதியில் அடுப்பு மூட்டி சமையலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பெண்களும், சாக்கடை, கழிவு, குப்பை கூளம் என்று கூட பார்க்காமல் மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளும்தான்.

சேரி என்பதால் வீசும் காற்றில் துர்நாற்றம் அதிகம். அது நம் மூக்கைத் துளைக்கும்போது அந்த இடங்களை அருவருக்கத்தக்க ஒன்றாக கருதவைக்கும். அது அவர்களுக்கு பழகிப்போன ஒன்று.

சுமார் 500 ஏக்கர் வரை பரவி இருக்கும் தாராவியின் மக்கள் தொகை எவ்வளவு என்பது துல்லியமாக இன்றளவும் எந்த அரசுப் பதிவேட்டிலும் இல்லை. இருந்த போதிலும் பெரும்பான்மையான ஆவணங்கள் தாராவியின் மக்கள் தொகை 5 லட்சம் முதல் 10 லட்சத்திற்குள் இருக்கும் என்று கூறுகின்றன. இதுவே உலகில் குறுகிய இடத்தில் அதிக மக்கள் வாழும் இடமாக கருதப்படுகிறது. இங்கு வாழும் 60% மக்கள் தாராவியில் கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்றனர். 2,10,00,000 மக்கள் வாழும் மும்பை மாநகரத்தின் 62% மக்கள் தாராவி போன்ற பல்வேறு சேரிகளில் வாழ்ந்து வருகின்றனர் என்பது வேதனையான செய்தி.

தாராவிக்கு மிக நீண்ட வரலாறு இருக்கிறது. மும்பை நகரம் என்பது கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் மையமாக இருந்து வருகிறது. 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவை அடிமைப்படுத்த வந்த ஆங்கிலேயன் மும்பை மாநகரத்தில்தான் தனது கிழக்கு இந்திய கம்பெனியை நிறுவத் தொடங்கினான். மும்பை நகரம் அற்புதமான புவியியல் அமைப்பை கொண்டதால் இது வணிகப் போக்குவரத்துக்குச் சிறந்ததாக கருதிய ஆங்கிலேயன், மும்பையை அதிக கவனம் கொண்டு ஆக்கிரமிக்கத் தொடங்கினான்.

அன்றைய மும்பை மக்கள் தொகை என்பது லண்டன் மக்கள் தொகையை விட பத்து  மடங்கு அதிகம். மும்பை கடும் மக்கள் நெரிசல் மிகுந்த இடமாக இருந்தது. அப்போது மும்பையை வீட்டு வசதி குறைபாடு, குடி நீர் பற்றாக்குறை, சுகாதாரக் கேடு போன்றவை வாட்டின. இருந்த போதிலும் ஆங்கிலேயர்கள் குடியிருப்புகளை மட்டும் மும்பையில் தனியாக கட்டினர். ஆள வந்தவன சுகபோக குடியிருப்புகளிலும், மண்ணின் மைந்தர்கள் சுகாதாரமற்ற ஒதுக்குப்புற இடங்களிலும் வசிக்க நேர்ந்தது.

அன்றைய மேற்குலக முதலீடுகளைக் கவர மும்பையை இரண்டு கூறாக பிளந்து அதில் ஒன்றை ஆடம்பர நகரமாகவும், மற்றொன்றை சுகாதாரமற்ற இடமாகவும் மாற்றினர். பின்னாளில் அது சேரிகளாக உருவாயின. இதுவே தாராவி என்னும் சேரி உருவான வரலாறு. பின் அந்தப் பகுதியைக் குறிவைத்து பல சாயப் பட்டறைகள், தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. முதல் தொழிற்சாலை தாராவியில் 1887ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அதில் இஸ்லாமியர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் வேலை செய்யத் தொடங்கினர். அதில் வரும் கழிவுகள் தாராவியின் வாழ்வாதாரத்தை மேலும் கேள்விக்குறியாக்கியது. அன்றைய காலகட்டத்தில் 2,00,000 மக்கள் காலரா, பிளேக் போன்ற கொடிய நோய்களால் இறந்தனர்.

பின்பு குஜராத், உத்தரப் பிரதேசம், தமிழகம் ஆகிய மாநிலங்களிலிருந்து மக்கள் இங்கு வந்து குடியேறத் தொடங்கினர். அன்றைய தாராவியில் மீன் பிடிப்புத்தான் முக்கிய தொழிலாக இருந்தது. இங்கு குறிப்பிடப்படவேண்டிய விஷயம், தாராவி அன்று ஒரு தீவாக இருந்தது.

இன்றைய தாராவியில் வாழும் மக்கள் மூன்று மத நம்பிக்கையை பின்பற்றுகின்றனர். இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம். இங்கு வசிக்கும் மக்களில் 60% இந்துக்கள், 33% முஸ்லிம்களும், 6% கிறிஸ்தவர்களும் இருக்கின்றனர். இம்மதங்களைச்சேர்ந்த மக்கள் ஒரு சில இடங்களைத்தவிர பல இடங்களில் தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர். இருந்த போதிலும் அவர்கள்  பிளவுபடாமல் ஒற்றுமையாகவே வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் வழிபாட்டுத்தலம் தாராவியில் அங்கொன்றும், இங்கொன்றுமாய் இருக்கின்றது. முதல் மசூதி படீ மஸ்ஜித் தாராவியில் 1887ல் நிறுவப்பட்டது.

இங்கு வாழும் மக்களின் சராசரி வாழ் நாள் 60 ஆண்டுகளாக இருக்கின்றன. போதிய அளவிற்கு கழிப்பறை வசதியில்லாததால்  ஒரு கழிவறையை 1500க்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பல தங்களுடைய சுயதேவைகளை ஏரிகள் ஓரமாகவோ, ஆற்றின் படுகையிலோ, சேரியின் நடுவிலோ நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

தாராவியில் வசிக்கும் சிலர் மகாராஷ்டிரா மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து குடியேறியவர்கள், அதேபோல் தமிழ்கத்தில் இருந்த் 1920களில் பலர் தாராவியில் குடியேறினர். இங்கு தமிழர்களுக்கு என்று பள்ளிக்கூடம் 1924ஆம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது. இதில் 50ற்கும் குறைவான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

அதிக மக்கள் நெரிசல் காரணமாக இங்கு ஆடம்பர அல்லது வசதியான வீடுகள் எதுவும் கிடையாது. ஒரே அறையைக்கொண்ட வீட்டில் அதிலும் ஐந்திற்கும் குறையாத குடும்பத்தினர் வசிக்க வேண்டும். சமையல் அறை, வரவேற்பறை, குளியலறை என்று எதுவுமே கிடையாது. எல்லாமே பொது இடங்களில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

தீப்பெட்டிப்போல் வரிசையாக அடுக்கி இருக்கும் தாராவி மக்களின் வீடுகள் எல்லாம் தகரத்தால் ஆனவை. வெயில் காலத்தில் வீட்டின் உள்ளே வெப்பம் சுமார் 45 ஃபாரன் ஹீட் இருக்கும். அரசு வெளியிட்ட தகவல்படி தாராவியில் உள்ள 70%க்கும் அதிகமான வீடுகள் சட்டத்திற்குப் புறம்பாக கட்டப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.

இங்குள்ள மக்களுக்கு தண்ணீர் வசதிகள். எம்.சி.ஜி.எம் மூலம் கொடுக்கப்படுகிறது. இடையில் ஏற்படும் தண்ணீர் திருட்டு, குழாய்களில் உள்ள துளைகள் மூலம் வீணாகும் தண்ணீர், சட்ட விரோத தண்ணீர் இணைப்புகள் மூலம் தாராவிக்கு வரும் தண்ணீர் அளவு நிர்ணயித்ததை விட குறைவாகவே வந்து சேர்கிறது. மிகவும் வியப்பான விசயம் என்னவென்றால், இங்கு வாழும் மக்களின் தொழில்கள்தான். இங்கு வசிக்கும் மக்களின் ஒட்டுமொத்த ஆண்டு வருமானம் என்னவென்று தெரிந்தால் நீங்கள் மூக்கில் விரல் வைப்பீர்கள். அது எவ்வளவு என்றால் ஒரு பில்லியன் டாலர்கள். உலகில் உள்ள சேரிகளில் இல்லாதது இந்தச் சேரியில் இருப்பதும் இதன் தனிச்சிறப்புகளும் நம்மை மலைக்க வைக்கிறது.

1040 துணிக்கடைகள், 590 தோல் பட்டறைகள், 500 எம்ப்ராய்டரிகள், 120 உணவகங்கள், 740 பொருள்களை மறுசுழற்சி செய்யும் தொழிற்கூடங்கள் என்று தாராவியில் மொத்தம் 7000க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிலையங்கள் இருக்கின்றன. இப்படி பல தொழில் நிலையங்களையும் பல்லாயிரக்கணக்கான உழைப்பாளிகளையும் உள்ளடக்கிய சேரிதான் தாராவி.

இதுமட்டுமின்றி, 15,000க்கும் அதிகமான குடிசைத் தொழில்கள் தாராவியில் நடைபெற்று வருகின்றன. இங்குள்ள மக்கள் எப்பொழுதும் சோம்பேறியாக இருந்தது கிடையாது என்று சொல்லும் அளவிற்கு மிகக் கடினமாக உழைக்கும் குணம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

கூலி வேலை செய்யும் தாராவி மக்கள் ஒரு நாள் கூலியாக பெறுவது 150 ரூபாய் தான். இதனைக் கொண்டுதான் இன்றளவும் தங்களுடைய அன்றாட வாழ்க்கையை சமாளித்து வருகின்றனர். தாராவி மக்களில் ஆண்கள் மட்டுமே வெளி வேலைகளைச் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகமான பெண்கள் வீட்டு வேலைகளிலும் குழந்தைகளை பராமரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே குறிப்பிட்டது போல இங்கு அதிக மக்கள் தோல் பட்டறை, மண்பாண்டம் செய்வது, துணிக்கடை, பிளாஸ்டிக், இரும்புப் பட்டறைகள் ஆகியவற்றில்தான் அதிகக் கவனம் செலுத்தி வருகின்றனர். இதன் ஆண்டு வருமானம் மட்டும் 665 மில்லியன் டாலர் ஆகும்.


தாராவியில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒரு தொழில், மறுசுழற்சி செய்யும் தொழில் பட்டறைகள்தான். மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் பயனற்றது என்று கருதி வீசப்படும் பொருள்கள் தாராவியில் மறுசுழற்சி மூலம் மறுவடிவம் பெறுகிறது. காகிதம், பிளாஸ்டிக், தோல், அலுமினியம், கண்ணாடிகள் போன்றவை இங்கு மறுசுழற்சி செய்யப்பட்டு புதிய பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.  இதுமட்டுமின்றி, 90களில் பயன்படுத்தப்பட்ட ஒலி நாடாக்கள், வீடியோ கேசட்டுகள் இங்கு மறுசுழற்சி செய்யப்படுகிறது. நட்சத்திர விடுதிகளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்டு வீசப்படும், சோப்புகள், துணிகள், துண்டுகள் கூட இங்கு மறுசுழற்சி செய்யப்பட்டு புதிய சோப்பு களாகவும், ஆடையாகவும மறுவடிவம் பெறுகிறது. அசுத்தமாக இருக்கும் தாராவி தூய்மைக்கான பெரும் புரட்சியை ஓசையின்றி செய்து வருகிறது. 

போதிய பாதுகாப்புக் கருவிகள் இன்றி இங்கு வேலை செய்யும் மக்களுக்கு உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். கொல்லன் பட்டறையில் கடும் வெப்பத்தில் வேலை செய்பவர்களுக்கு குளிர் சாதன வசிதி கிடையாது. நெருப்பில் வேலை செய்பவர்களுக்கு பாதுகாப்புக் கவசம் எதுவும் கிடையாது. பிளாஸ்டிக், துணிகள் தயாரிக்கும் கூடங்களில் வெளிவரும் சிறிய அளவு தூசி துகள்கள் அங்கு வேலை செய்பவர்களின் மூச்சு குழாய்க்குச்சென்று சுவாசக் கோளாறை உருவாக்குகிறது. நோய்களில் கஷ்டப்படும் மக்களுக்கு முகமூடி கிடையாது, கரும் புகையில் வேலை செய்பவர்களுக்கு மூக்கில் அணிய சிறப்பு முகமூடி கிடையாது.

பல கோடிகள் ஆண்டு வருமானமாக ஈட்டும் தொழில் கூடங்கள் நிறைந்து இருக்கும் தாராவி, இது போன்ற சாதனங்கள் இன்றி செயல்படுவது தனி மனித சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இருந்தும் அதனை விட்டால் அவர்களுக்கு வேறு வாழ்வாதாரம் எதுவும் கிடையாது. இங்கு தயாரிக்கும் பொருள்கள் மகாராஷ்டிரா மட்டுமின்றி, இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆடை, பிளாஸ்டிக் போன்ற சில பொருள்கள் உலக நாடுகளுக்கு கூட ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2015க்கு பின்பு இங்குள்ள 200க்கும் மேற்பட்ட தொழில் கூடங்கள் தங்களுடைய பொருள்களை விற்க இணையதளத்தை பயன்படுத்தத் தொடங்கினர். ஆன்லைன் வர்த்தகத்தில் தாராவியின் பல தொழில் முனைவோர் நுழையத் தொடங்கினர். ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்கள் தாராவியின் தொழில் முனைவோருக்கும் மிகவும் பயனாக உள்ளது.

நவீன அலைப்பேசிகளில் பெண்கள் பாதுகாப்புக்கு பிரத்தியேகமான செயலியை தாராவியில் வாழும் பள்ளி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். அதே போல் தண்ணீர் சம்பந்தமான ஒரு செயலியையும் ஆரம்ப பள்ளியில் மழலைகளுக்கு என்று ஆங்கிலம், இந்தி வார்த்தைகளையும் எளிய கணக்குகளையும் அடக்கிய செயலியையும் தாராவியின் மாணவிகள் வடிவமைத்தனர். இது மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.  தாராவியில் வசிக்கும் இளைஞர்கள் ஹிப் ஆப் எனும் நடனத்தில் மிக ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர். அதில் ஆகாஷ் தனகர் என்பவர் இப்படி ஆர்வமாக உள்ள இளைஞர்களுக்கென்று ஒரு நடனக் குழுவை உருவாக்கி இவர்களை உலகப் புகழ் பெற்ற ஹிப் ஆப் நடனக் கலைஞர்களுடன் இணைந்து நடனமாடும் சூழலை ஏற்படுத்தியுள்ளார். இவர்களுடன் டோக்யோ சரசா, சில்வர் பூம்பக்ஸ், கலிபோர்னியா மந்தீப் சேதி போன்றவர்கள் நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

தாராவியில் ஆண்டுக்கு ஒரு முறை ஓவியத் திருவிழா நடைபெறுவது வழக்கம். மூன்று வாரங்கள் நடைபெறும் இவ்விழாவில் தாராவியில் வாழும் பலதரப்பட்ட மக்கள் தங்களுடைய ஓவியக் கலையை பறை சாற்றும் வகையில் பல ஓவியங்களை அதில் பார்வைக்கும் வைப்பார்கள். இதில் சிறந்தவைக்கு பரிசும் உண்டு. தொழில் புரட்சியில் புதிய பரிணாமத்தைக் கொண்ட தாராவிக்கு பலர் தொழிற் சுற்றுலா வருவதும் உண்டு. மக்கள் அதிக ஆர்வத்தோடு இங்கு வந்து தாராவியின் தொழிற் கூடங்களையும், பட்டறைகளையும் பார்வையிடுகின்றனர். இதே போல் தங்களுடைய பகுதிகளிலும் தொழிற்கூடங்களை அமைக்க பார்வையாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். 

தாராவி பகுதியை பல முன்னனி இயக்குனர்கள் தங்களுடைய திரைப்படங்களில் இடம் பெறச் செய்துள்ளனர். மும்பை திரைப்பட உலகம் தாராவியை மையமாகக் கொண்டு பல திரைப்படங்களை தயாரித்துள்ளது. அதில் சலீல் ஜாவித் இயக்கிய தீவார், மீரா நாயர் இயக்கிய சலாம் பாம்பே, விது வினோத் சோப்ரா இயக்கிய பாரிப்டா, சுதிர் மிஸ்ரா இயக்கிய 'தாராவி', ராம் கோபால் வர்மா இயக்கிய 'இந்தியன் காங்ஸ்டர் டிரைலோஜீ' ஆகியவை மிக பிரபலம்.

அதேபோல் மாற்றுமொழித் திரைப்படங்களும் தாராவியிலும், தாராவியை மையமாகக் கொண்டும் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழ்த் திரைப்படங்கள், இயக்குனர் மணிரத்தினத்தின் ' நாயகன்'. 'பம்பாய்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் தாராவியில் வசிக்கும் தமிழ் மக்கள் பற்றிய திரைப்படமாகும்.

அதேபோல் உலக அளவில் பலரது கவனத்தை ஈர்த்த 'ஸ்லம் டாக் மில்லியனரி' தாராவியில் தான் எடுக்கப்பட்டது. இதில் நடித்த சில குழந்தைகள் தாராவியில் பிறந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுகாதாரமற்ற நிலை காரணமாக தாராவியில் கடந்த 25 ஆண்டுகளாக கடுமையான நோய்கள் தாக்கி பல ஆயிரம் மக்கள் இறந்துள்ளனர். சில ஆண்டுகளாக தாராவியை வாட்டி வதைப்பது வயிற்றுப்போக்கும், வைரஸ் நோய்களும்தான். போதிய மருத்துவ வசதிகள் தாராவியில் இல்லாததால் பல குழந்தைகள் இறந்துள்ளன. இதைத்தவிர தாராவியை பதம் பார்த்தது 2013ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தும், 2005ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும்தான். இதில் அதிகமான உயிர், பொருள் சேதங்கள் ஏற்பட்டன.

இத்தகைய சமூக பண்பாட்டை கொண்ட தாராவி போன்று பல சேரிகள் இந்தியாவில் இருக்கின்றன. இவற்றைச் சரி செய்வதாகக் கூறி அவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதைவிட அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்யட்டும். மறுவாழ்வு என்ற பெயரில் நகரத்தின் ஒரு ஓரத்தில் வீடு கட்டிக்கொடுத்துவிட்டால் இது முடிந்துவிடாது. தாராவி மக்களுக்கு அரசு தொழில் வாய்ப்புகளையும், ஊக்கத்தொகையையும் கொடுக்க வேண்டும். தாங்கள் வாழும் இடங்களில் சுகாதாரம் கிடைக்க, முதலில் அரசு அங்கு கொட்டப்படும் குப்பைகளையும், கழிவு நீர் குழாய்களையும் மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும். நாளைய தலைமுறைக்கும் தரமான  கல்வியை கொடுத்தால் அவர்களின் சமூக மாற்றத்திற்கு வித்தாக அமையும். சேரிகள் இல்லா தேசம் அமைய வேண்டும்.

- ஆரூர் யூசுப்தீன்
ஆன்லைன் ஊடக வாசகர்

Nov 3, 2016

செந்தமிழ் நாடெனும் போதினிலே...

'வட வேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகு’ என்று பாடியுள்ளார் தொல்காப்பியத்திற்கு பாயிரம் எழுதிய பனம்பாரனார். ஆனால், வரலாற்றில் ஒருபோதும் வடவேங்கடம் முதல் தென்குமரி வரை ஒரே பூகோள அமைப்பாக கொண்டு ஆட்சி நடந்ததாக தெரியவில்லை. ஒரே மொழி பேசும் தமிழ்கூறு நல்லுலகம் இந்த எல்லைக்குள் விரிந்து பரந்திருந்தாலும் குறுநில மன்னர்கள், சிற்றரசர்கள் மூவேந்தர்கள் தமிழ்ப் பகுதியை ஆண்டு வந்துள்ளனர்.

பிரிட்டிஷாரின் காலனியாட்சிக் காலத்தில் தான் இந்தியா என்கிற பெரு நிலப்பரப்பு உருவாக்கப்பட்டது. அதன் ஒருபகுதியாக சென்னை ராஜதானி இருந்தது. விடுதலை பெற்ற இந்தியாவின் மாநிலங்கள் மொழி வழியில் அமைவதே பொருத்தமாக இருக்கும் என்று காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டது. ஆனால், ஆட்சிக்கு வந்தபிறகு மொழிவழி மாநிலங்கள் அமைப்பதில் காங்கிரஸ் அரசு முனைப்புக் காட்டவில்லை.

இந்தநிலையில் கம்யூனிஸ்ட் இயக்கம் மொழிவழி மாநிலங்கள் அமைவதே இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் பொருத்தமாக இருக்கும் என்ற கருத்தை முன்வைத்தது. சென்னை ராஜதானியின் சட்டமன்றத்தில் இதற்காக கம்யூனிஸ்ட்டுகள் குரல் எழுப்பினர். தமிழகத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்டுகள் தமிழிலும் கேரளப் பகுதியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்டுகள் மலையாள மொழியிலும், ஆந்திர பகுதியை சேர்ந்த கம்யூனிஸ்ட்டுகள் தெலுங்கு மொழியிலும் முழக்கமிட்டனர்.

விசால ஆந்திரா, ஐக்கியக் கேரளம் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இந்தப் பின்னணியில் தான் சென்னை ராஜதானியின் ஒரு பகுதி கேரளத்திலும், ஒரு பகுதி ஆந்திராவிலும் இணைக்கப்பட்டன. இப்போது உள்ள தமிழகம் உருவானபோதும் சென்னை மாகாணம் என்றே அழைக்கப்பட்டது.

தமிழ்நாடு என்ற பெயர்சூட்ட வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தார் தியாகி சங்கரலிங்கனார். அவரது போராட்டத்தை காங்கிரசார் கொச்சைப்படுத்திய நிலையில் அவருக்கு துணை நின்றவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.

‘மதராஸ் மனதே’ என்று சென்னையை ஆந்திராவுடன் இணைக்க வேண்டும் என்று சிலர் போராடியபோது ஆந்திராவைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் பி. சுந்தரய்யா சென்னை தமிழ்நாட்டுக்கே உரியது என்று தைரியமாக எடுத்துரைத்தார். அதே போல தமிழக எல்லைக்கான போராட்டத்தில், பங்கேற்றபோது கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள் எம்.ஆர்.வெங்கட்ராமன், ஜீவா ஆகியோரது மண்டை உடைக்கப்பட்டு ரத்தம் கொட்டியது. ஆம். தமிழக எல்லைக்காக ரத்தம் சிந்தியவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த நாஞ்சில்நாட்டை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற போராட்டத்தில் ஈடுபட்ட மார்ஷல், நேசமணி போன்ற தலைவர்களோடு இணைந்து போராடியவர்கள் குமரி மாவட்ட கம்யூனிஸ்ட்டுகளான ஜீவா, ஜி.எஸ்.மணி, டி.மணி போன்றவர்கள்.

நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு கோரிக்கைக்கு ஆதரவாக தீர்மானம் கொண்டு வந்தார் கம்யூனிஸ்ட் இயக்க தலைவர் பி.ராமமூர்த்தி. அந்தத் தீர்மானம் விவாதத்திற்கு வந்தபோது அவர் சிறையில் இருந்தார். எனவே வங்கத்தைச்சேர்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் பூபேஸ் குப்தா முன்மொழிந்து பேசினார். அண்ணா அகமகிழ்ந்து வழிமொழிந்தார்.

பின்னர் அண்ணா முதல்வராக பொறுப்பேற்ற பிறகுதான் சென்னை மாகாணம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் பெற்றது. இன்றைக்கு மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக பலவீனமான மாநிலங்கள், அதிகாரங்கள் குவிக்கப்பட்ட மத்திய அரசு என்ற கோட்பாட்டைக்கொண்டி ருப்பதால் மொழிவழி மாநிலங்களை சிதைத்துக் கொண்டிருக்கிறது. இந்த அதிகாரக் குவிப்புக்கு எதிராக போராட வேண்டிய அவசியம் உள்ளது.

சாதிய அடிப்படையில் தமிழகத்தை துண்டாட வேண்டும் என்ற குரலும் அவ்வப்போது சுயநல அடிப்படையில் எழுந்து கொண்டுதான் இருக்கிறது. யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற சங்கப் புலவனின் வழிநின்று, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவ நெறியை வழித்துணையாகக் கொண்டு சாதியத்திற்கு எதிரான போராட்டத்தை சமத்துவத்திற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியுள்ளது. ஆதிக்கம் யாருக்கு, இந்தி மொழிக்கா? ஆங்கில மொழிக்கா? என இரு கட்சியாக பிரிந்து மோதியபோது தமிழகத்தில் தமிழுக்கே முன்னுரிமை என்று முழக்கமிட்டவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.

இன்றைக்கு ‘தமிழ்நாடு’ அமையப்பெற்று 60-வது ஆண்டை கொண்டாடுகிற நல்வேளையில் ‘வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு’ என்ற மகாகவி பாரதியின் வரிகளால் வாழ்த்துச் சொல்வோம்.

Oct 30, 2016

பொது சிவில் சட்டம் - சிறு விளக்கம்




1. பொது சிவில் சட்டம் என்றால் என்ன?
பொது சிவில் சட்டம் என்பது ஒரு நாட்டின் அனைத்து சமயம், மொழி, இனம் மற்றும் குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கான பொது உரிமையியல் சட்டங்களை குறிக்கிறது.

2. தனியார் சிவில் சட்டம் என்றால் என்ன?
மக்கள் தமக்கு இடையே நடைமுறைப்படுத்திக் கொள்ளக்கூடிய மதம் சம்மந்தப்பட்ட மிகச் சில விஷயங்களை மட்டும் தனியார் சிவில் சட்டங்கள் என வழங்கப்படுகிறது.

3. முஸ்லிம் தனியார் சட்டம் எப்போது முதல் உள்ளது?
மொகலாயர்கள் ஆட்சி காலம் முதலே இந்தியாவில் முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் அவரவர்களின் மத நம்பிக்கைப்படி செயல்படுவதற்கு தனியாக சட்டங்கள் 
இருந்திருக்கின்றன. 1862 ல் ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் ஐபிசி என்ற புதிய சட்ட முறையைக் கொண்டு வந்தார்கள். பின்னர் 1937 ல் முஸ்லிம் தனியார் சட்டம் அமலுக்கு வந்தது. 1939 ல் முஸ்லிம் திருமணச் சட்டம் ஷரியத் சட்டத்தின் அடிப்படையில் இயற்றப்பட்டது. இதுதான் இன்று வரை நீடித்து வருகிறது.

4. பல சமூகங்கள் வாழும் நாட்டில் முஸ்லிம்களுக்கு மட்டும் தனியாக சட்டம் இருப்பது சரியா?
இந்தியாவில் முஸ்லிம்களுக்கு மட்டும் தனியாக சட்டங்கள் இருப்பதாக நினைப்பது தவறு. முதலில் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். சட்டங்கள் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று கிரிமினல் சட்டம் மற்றொன்று சிவில் சட்டம். இதில் கிரிமினல் சட்டம் முழுமையாக (100%) எல்லோருக்கும் பொதுவாக இருக்கின்றது. ஒரு முஸ்லிம் கொலை செய்தாலும், ஒரு இந்து கொலை செய்தாலும் வேறு எவர் கொலை செய்தாலும் அவர்களுக்கு சட்டத்தின்படி ஒரே தண்டனைதான். இதில் எவருக்கும் எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை. கொலை மட்டுமல்ல கிரிமினல் சட்டத்தின்கீழ் கருதப்படும் அனைத்து செயல்களுக்கும் தண்டனை எல்லோருக்கும் பொதுவானதுதான்.

சிவில் சட்டத்திலும் 80% மேலாக எல்லோருக்கும் பொதுவாகத்தான் இருக்கின்றது. உதாரணத்திற்கு கடன் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் சிவில் சட்டத்தின்கீழ் வருகின்றன. அதில் முஸ்லிம்கள் தங்களுக்கு என்று தனிச்சட்டம் வைத்துக்கொள்ளவில்லை. கடன் பிரச்சனையில் இந்தியாவில் உள்ள பொதுவான சட்டமே முஸ்லிம்களுக்கும். இதுபோல் பல சிவில் சட்டங்களும் எல்லோருக்கும் பொதுவாகவே உள்ளது. குறிப்பிட்ட மிகச் சில விஷயங்களில் மட்டும் முஸ்லிம்களுக்கு அவர்களின் சமயம் சார்ந்த முறையில் தீர்த்துக் கொள்வதற்கு தனியாக சிவில் சட்டம் அரசியல் சாசனத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

அதுவும்கூட முஸ்லிம்களுக்கு மட்டும் இப்படி தனிச் சலுகை வழங்கப்படவில்லை. இந்துக்கள், ஜைனர்கள், சீக்கியர்கள், கிறித்தவர்கள், புத்தர்கள், பார்சிகள், யஹோதிகள் என பல சமூகங்களுக்கும் அவர்களின் நம்பிக்கையை பின்பற்றும் வகையில் அவர்களுக்கும் தனிச்சட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களுக்கு மட்டுமே தனி சிவில் சட்டம் இருப்பதாக மாயத்தோற்றம் உருவாக்கப்படுகிறது. அதில் எள்ளளவும்
உண்மை இல்லை.

5. எந்தந்த விஷயங்களுக்காக முஸ்லிம்கள் தனிச்சட்டத்தை பயன்படுத்துகிறார்கள்?
திருமணம், திருமண முறிவு, ஜீவனாம்சம், வாரிசுரிமை, சொத்து மற்றும் பரம்பரை சொத்தை பங்கீடு செய்தல், குழந்தைகளை தத்து எடுத்தல், வக்ப் நிலங்கள் போன்ற ஒருசில விஷயங்கள் முஸ்லிம் தனியார் சிவில் சட்டத்தின்கீழ் வருகின்றன.

6. இந்திய அரசியல் அரசிலமைப்பு சட்டம் பொது சிவில் சட்டம் குறித்து என்ன கூறுகிறது?
அரசியல் சாசனத்தின் 44 வது பிரிவு பொது சிவில் சட்டம் குறித்து பேசுகிறது. "நாட்டிலுள்ள எல்லாக் குடிமக்களுக்கும் பொதுவான ஒரு சிவில் சட்டம் உருவாக்கிட முயல வேண்டும்" என்கிறது. அது 'கொள்கை விளக்கம்' என்ற தலைப்பின்கீழ் இடம்பெற்றுள்ளது. இது கட்டாயம் என்று சொல்லவில்லை. இது ஒரு ஆலோசனை மட்டுமே.

7. பொது சிவில் சட்டம் கொண்டுவர நீதிமன்றம் உத்தரவிட முடியுமா?
"கொள்கை விளக்கம்" என்ற தலைப்பு மற்ற தலைப்புகளிலிருந்து வேறுபட்டது. மற்ற தலைப்புகளில் உள்ளதை செயல்படுத்தாவிட்டால் நீதிமன்றம் தலையிடலாம். ஆனால் "கொள்கை விளக்கம்" என்ற தலைப்பில் கூறப்படுபவற்றை செயல்படுத்துமாறு நீதிமன்றம் கட்டளையிட முடியாது.  இந்த பகுதியில் விதிக்கப்பட்டவற்றை எந்த நீதிமன்றத்தின் மூலமாகவும் வலியுறுத்த முடியாது என்று கொள்கை விளக்கத்தின் 37 வது பிரிவு கூறுகிறது.

8. இந்த விஷயத்தில் நீதிமன்றங்கள் தலையிட்டு இருக்கின்றனவே?
ஆம். உண்மைதான். 1995 ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் "அனைத்து மதத்தவர்களுக்கு பொது சிவில் சட்டம் ஒன்றை ஓராண்டிற்குள் நிறைவேற்ற வேண்டும்" என்று மத்திய அரசிற்கு உத்தரவிட்டிருக்கிறது. அதேபோல் 2003 ல் "அரசியல் 
நிர்ணயச் சட்டத்தின் பிரிவு 44 க்கு இன்றும் ஊக்கம் தராதது மிகவும் வருத்தத்திற்குரியது. நாடாளுமன்றம் இந்த நாட்டில் ஒரு பொது சிவில் சட்டம் கொண்டு வர இன்னும் முதல் அடியைக்கூட எடுத்து வைக்கவில்லை. ஒரு பொது சிவில் சட்டம் கொள்கைகளின் அடிப்படையில் எழும் முரண்பாடுகளை அப்புறப்படுத்தி தேசிய ஒருமைப்பாடு என்ற லட்சியத்திற்கும் பெரிதும் உதவி செய்யும்" என்று 23.07.2003 நடைபெற்ற ஒரு வழக்கில் தலைமை நீதிபதி வி.என்.ஹாரே இவ்வாறு கருத்து கூறியிருக்கிறார்.

ஆனால் இது தவறான அணுகுமுறை. அரசியல் சாசனத்தையே அவமதிக்கும் செயல். ஏனென்றால் கொள்கை விளக்கம் பகுதியில் இடம்பெற்றுள்ளவற்றை எந்த நீதிமன்றத்தின் மூலமாகவும் வலியுறுத்த முடியாது என்று கொள்கை விளக்கத்தின் 37 வது பிரிவு திட்டவட்டமாக கூறுகிறது.

9. நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது சரி, மத்திய அரசு கொண்டு வரலாம்தானே?
"அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் பொது சிவில் சட்டத்தை அரசு கட்டாயம் கொண்டு வர வேண்டும்" என்று சிலர் பேசுகிறார்கள். ஒரு விஷயத்தை விளங்கி கொள்ள வேண்டும். அரசியல் சாசனத்தை உருவாக்கிய அம்பேத்கர் அதன் முதல் 35 பிரிவுகளை கட்டாயமாக்கினார். கண்டிப்பாக செயல்படுத்தப்பட வேண்டியவற்றை அதில் கொண்டு வந்தார். ஆனால் கருத்தொற்றுமை ஏற்படுத்த முடியாமல் 36 முதல் 51 
வரை உள்ள பிரிவுகளை "வழிகாட்டும் கொள்கை"களாக மாற்றினார். பொது சிவில் சட்டம் குறித்து பேசும் பிரிவு 44  இதில்தான் வருகிறது. அதனால் இதனை கட்டாயம் 
கொண்டுவந்துதான் ஆகவேண்டும் என்பதில்லை. பிரிவு 36 முதல் 51 வரை 16 பிரிவுகளில் பல்வேறு விஷயங்கள் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் அவைகளையெல்லாம் நிறைவேற்றாமல் பிரிவு 44 க்கு மட்டும் ஏன் முக்கியத்துவம் 
கொடுக்கிறார்கள். இதிலிருந்தே அவர்களின் நோக்கம் தெரிகின்றதல்லவா!

10. பிரிவு 36 - 51 என்னன்ன கூறுகிறது? எதை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்று கூறுகிறீர்கள்?
"கொள்கை விளக்கம்" பகுதியில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான விஷயங்களை அரசு கண்டுகொள்ளவில்லை. உதாரணத்திற்கு சில மட்டும். 

பிரிவி 41 :
"அனைவருக்கும் வேலைவாய்ப்பு தரப்பட வேண்டும். சக்திமீறிய வேலையாக அது இருக்கக்கூடாது" என்று கூறுகிறது. ஆனால் அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்ற நிலை இன்று வரை உருவாக்கப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் வேலையின்மை 
அதிகரித்துதான் வருகிறது. அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்பதை இதுவரை எந்த அரசும் கட்டாயமாக்க முன்வரவில்லை.

பிரிவு 45 :
"14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் பத்து ஆண்டுகளுக்குள் கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க வேண்டும்" என்று சொல்கிறது. ஆனால் முதல் பத்து ஆண்டுகளில் அல்ல கட்டாயக் கல்வி சட்டம் கொண்டுவருவதற்கே 60 ஆண்டுகளை அரசு கடத்திவிட்டது. ஒப்புக்கு சப்பாக இருக்கும் அந்த சட்டத்தையும் வலுவிழக்க மோடி அரசு முயன்று வருகிறது.

பிரிவு 46 :
"தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் கல்வி, பொருளாதார மேம்பாட்டில் அரசு கவனம் செலுத்த வேண்டும்" என்று சொல்கிறது. இதிலும் இதுவரை இருந்த அரசுகள் 
கவலைப்படவில்லை.  அவர்களின் வாழ்க்கை தரம் கீழான திசையிலேயே சென்று கொண்டு இருக்கிறது.

பிரிவு 47 :
"மதுவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்" என்று கூறுகிறது. இது குறித்து எல்லா அரசுகளும் கள்ள மௌனம் சாதிக்கின்றன. மதுவிலக்கை கொண்டு வர எந்த அரசுகளும் 
முயற்சி எடுக்கவில்லை. மாறாக மதுவின் மூலம் வரும் வருமானதியே பல அரசுகளும் நம்பியிருக்கின்றன. இதுபோல சொல்லிக்கொண்டே போகலாம். இதுபோன்ற மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட பிரிவுகளில் கவனம் செலுத்தாத அரசு பிரிவு 44 ல் மட்டும் கவனம் செலுத்துவது தவறுதானே.

11. அரசியல் சாசனத்தில் வலியுறுத்திய விஷயத்தை எதிர்ப்பது சரியா?
அரசியல் சாசனம் குறிப்பிட்டுள்ள எல்லாவற்றையும் நடைமுறையில் செயல்படுத்திட முடியாது. காரணம் பலதரப்பட்ட மக்கள் இங்கு வசிக்கிறார்கள். ஒருவருக்கு 
ஆதரவானது மற்றவருக்கு எதிரானதாககூட இருக்கும். உதாரணத்திற்கு : அரசியல் சாசனத்தில் 343 (1) பிரிவில் "மத்திய அரசின் ஆட்சி மொழியாக இந்திதான் இருக்க வேண்டும்" என்று திட்டவட்டமாக சொல்கிறது. அதற்காக நாம் இந்தி தேசிய 
மொழி ஆக்கப்படுவதை ஆதரிக்க முடியுமா? அதுபோல் தான் இதுவும்.

பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டால் அரசியல் சாசனம் வழங்கிய மற்றொரு உரிமைக்கு எதிரானதாக அமையும். குறிப்பாக "விருப்பமான மதத்தில் குடிமக்கள் நம்பிக்கை கொள்ளலாம். ஏற்கலாம்; பின்பற்றலாம்; பிரச்சாரம் செய்யலாம்" என்று 25 (1) பிரிவு உரிமை வழங்கியுள்ளது. இந்த உரிமைக்கு எதிராகவே பொது சிவில் சட்டம் அமையும்.

12. அரசியல் சாசனம் முஸ்லிம் அல்லாத வேறு சமூகத்திற்கு சிறப்பு விதிவிலக்கு அளிக்கிறதா?
கண்டிப்பாக. பல சமூகங்களுக்கு அவர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்கும் வகையில் பல விஷயங்களில் சலுகை அளித்திருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்று
சொன்னால் :

அரசியல் சாசனத்தில் 19 (1) (ஆ) பிரிவில் "ஆயுதங்கள் இன்றி அமைதியாக கூடுவதற்கு குடிமக்களுக்கு உரிமை இருக்கின்றது" என்கிறது. ஆனால் சீக்கியர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கிறது. "குருவாள்களை வைத்துக்கொண்டு சீக்கியர்கள் மட்டும் நடமாடலாம்; கூடலாம்" என்று இந்த 25 வது பிரிவு விளக்கம் கூறுகிறது.

அதேபோல் காவல்துறை, இராணுவத்தில் எந்த சமூகங்களாக இருந்தாலும் ஒரே மாதிரி சீருடைதான். ஆனால் சீக்கியர்களுக்கு மட்டும் அவர்களின் மத வழக்கப்படி தலைப்பாகை வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

"பொது இடங்களில் நிர்வாணக் காட்சி தருவது சட்டப்படி குற்றம்". அப்படி யாராவது நடந்து கொண்டால் அவர்களின்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கமுடியும். ஆனால் இந்து மதத்திலும், ஜைன மதத்திலும் நிர்வாணச் சாமியார்களுக்கு நிர்வாணமாக வெளியில் நடமாட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

13. பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு எதிர்ப்பை மீறி கொண்டுவந்தால்?
கடுமையான எதிர்ப்பு இருப்பதால் அரசு கொண்டு வர தயங்கும் என்றே கருதுகிறேன். அப்படி எதிர்ப்பை மீறி கொண்டு வந்தாலும் அது ஏட்டளவில் மட்டுமே இருக்கும். நடைமுறையில் முஸ்லிம்கள் தங்களின் சமயத்தின் வழிபடியே தொடர்ந்து செயல்படுவார்கள். ஷரியத் என்கிற அந்த சட்டத்தை முஸ்லிம்கள் தங்களின் உயிருக்குமேலாக நினைக்கிறார்கள். அதனை ஒருபோதும் யாருக்காகவும் விட்டுவிட மாட்டார்கள். இதில் அரசுதான் தோற்று போகும்.

- வி.களத்தூர் எம்.பாரூக்

(பொது சிவில் சட்டம் தொடர்பாக கட்டுரையாளரின் முந்தைய கட்டுரையை வாசிக்க : http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31704-2016-10-24-05-58-54)

Oct 13, 2016

கார் டயருக்கும் கோயில் கட்டிவிடப்போகிறார்கள்...!

panneer selvam become jayalalitha

தமிழக அரசியல் வரலாற்றில் 32 ஆண்டு களுக்கு முன் நடந்தவை மீண்டும் சுழற்சி முறையில் நடந்துள்ளது. 1984ல், தமிழக  முதல்வர், எம்.ஜி.ஆர். உடல் நலம் பாதிக்கப்பட்டு  இதே   அப்பல்லோ மருத்துவமனையில் சிகிசையில் இருந்தார்.

மூன்று மாதங்கள் சிகிச்சை நடந்தது. அப்போது அரசு செயல்பாடுகள் முடங்கியது. முக்கிய அரசு முடிவுகள் எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர். அப்போதும் திமுக தலைவர் கலைஞர் அரசுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய  குரல் எழுப்பினார் .

'அரசின் செயல்பாடுகள் முழுமை யாக முடங்கியுள்ளன; மாநில நலன் கருதி, பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும்' என ஆளுநர்  எஸ்.எல்.குரானாவுக்கு கோரிக்கை விடுத்தார். அதுவரை அதிமுகவுக்கு ஆதரவாக இருந்த  ஆளுநர்  குரானா அப்போதைய  நிதியமைச்சர்  இருந்த நெடுஞ்செழியனை அழைத்து பேசினார். நெடுஞ்செழியன் அப்போதும் இரண்டாம் இடத்தில்தான் இருந்தார். அண்ணா மறைவின் போதும் இரண்டாம் இடத்தில் இருந்த நெடுஞ்செழியன்தான் தற்காலிக முதல்வர். 'முதல்வர் எம்.ஜி.ஆர்., சிகிச்சை பெறட்டும்.அதுவரை  ஆட்சி நிர்வாகம் செயல் இழந்து விடக் கூடாது. எனவே மாற்று ஏற்பாடுகளை செய்யுங்கள்' என உத்தர விட்டார்.

'மூத்த அமைச்சர் என்ற வகையில், ஆட்சி நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளும்படி, என்னிடம், எம்.ஜி.ஆர்., கூறியுள்ளார்' என, கவர்னரிடம் நெடுஞ்செழியன் தெரிவித்தார். அதைஏற்று, 'முதல்வர் நலம் பெற்று திரும்பி வரும் வரை, அவரது பொறுப்புகளை, மூத்த அமைச்சர் நெடுஞ்செழியன் கவனிப்பார்; அமைச்சரவை கூட்டங்களுக்கும், அவரே தலைமை வகிப்பார்' என்று, கவர்னர் குரானா அறிவித்தார்.

அதேநிலை இப்போது தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்., இடத்தில் ஜெயலலிதா வும், நெடுஞ்செழியன் இடத்தில், பன்னீர்செல்வமும் உள்ளனர். அன்று, எம்.ஜி.ஆர்., நலம் பெற்று, திரும்ப வந்ததும், நெடுஞ்செழியன் பொறுப்பை ஒப்படைத் தார்.பின் தனது வழக்கப்படி இரண்டாவதாக நிதி அமைச்சராக தொடர்ந்தார். அந்த வகையில் நெடுஞ்செழியன் முன்னாள் பன்னிர் செல்வம்தான். எம்.ஜி.ஆருக்கு நெடுஞ்செழியன் போல, ஜெயலலி தாவுக்கு பன்னீர்செல்வம்  இருக்கிறார்.

அதனால், இப்போது முதல்வர் இலாகாக்களை கவனிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார்.அறிவிக்கப்படாத முதல்வராக அவர் செயல்பட இருக்கி றார். முதல்வர் வசமிருந்த, உள்துறை, இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி, வனப் பணி, பொது நிர்வாகம்,மாவட்ட வருவாய் அலுவலர்கள் ஆகிய துறைகளை, இனி பன்னீர்செல்வம் கவனிக்க வேண்டும். ஜெயலலிதாவை பொறுத்தவரை பொறுப்பில்லாத முதல்வர்தான். பன்னீர்செல்வத்தை இந்த பொறுப்பில் வைக்காமல் தனக்கு கைக்குள் அடங்கிய எடப்பாடி அல்லது ஓ.எஸ் .மணியத்தை பொறுப்பில் வைக்க உடன் பிறவா சகோதரி செய்த முயற்சிகள் அனைத்தும் ஏற்கனவே இரு முறை இந்த டம்மி பதவி வகித்த  பன்னீர்செல்வம் தகுதியானவராக இருப்பார் என்று ஆளுநரும்,பாஜக மேலிடமும் கருதியதால் வீணானது. மீண்டும் பழைய  பன்னீர்செல்வமாக  திரும்பி வந்து விட்டார்.ஆனால் இம்முறை வடக்கில் இருந்து வீசும் காற்றுக்கேற்பத்தான் ஆடுவார்.

அதை யாராலும் தடுக்க முடியாது.வேறு வழி ? பன்னீர்செல்வம் கார் டயரை கும்பிட்டாலும் கூட அதை நாம் கலாய்த்தாலும் கூட அது தற்போதைய முதல்வர்  பன்னீர்செல்வத்துக்கு  பலனை அள்ளி  கொடுக்கத்தான்  செய்துள்ளது .போகிற போக்கில் இருக்கிற சாமிகள் வரிசையில் கார் டயருக்கும் கோவில் வந்து விடும் அபாயம் உள்ளது.


- சுகுமாரன்

Oct 12, 2016

கொத்தடிமை முறை முற்றிலும் ஒழிந்துவிட்டதா..?

still slave system is being practised

மனிதகுலத்தின் முதலாவது அமைப்பு என்றால் அது பொதுவுடைமையே. இயற்கையில் கிடைத்த காய்கனிகளை உண்டு விலங்கை வேட்டையாடிப் பகிர்ந்து உண்ட சமுதாயம் ஆடு, மாடுகளை வளர்க்கத் தொடங்கியது. மேய்ச்சல் நிலங்களைத் தேடியது. அவர்களின் தேவையும் உணவுத் தேவையும் அதிகரிக்கத் தொடங்கியது. இயற்கை வளங்களைப் பயன்படுத்திக் கொள்ள போட்டி உருவானது. போட்டியில் தோற்றவர்கள் கொல்லப்பட்டனர். அடுத்த கட்டத்தில் தோற்றவர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு அடிமைகளின் எஜமானர்களாக மாறி, உரிமையாளர், உரிமையற்றவன் என்ற பாகுபாடும் வர்க்கப் பேதமும் உருவாகி அடிமைச் சமுதாயம் ஏற்பட வழிவகுத்தது.

ஜக்கிய அமெரிக்கா நாடுகள் உருவான பின் 1787-ஆம் ஆண்டு பிலடெல்பியா நகரில் மாநாடு நடைபெற்றது. அதில் பன்னாட்டு அடிமை முறை பற்றி விவாதிக்கப்பட்டது. இதை ஒழிக்க 20 ஆண்டுகள் தேவைப்படும் என்று அந்த மாநாட்டில் கூறப்பட்டது. பிரான்சில் 1789-ஆம் ஆண்டு ஒழிக்கப்பட்டது. இங்கிலாந்தில் 1808-ல் தடை போட்டது. 1833-ல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் முடிந்ததும் 1865-ல் ஒழிக்கப்பட்டது. 1948-ல் ஜக்கிய நாடுகள் பொதுச் சபை அடிமை முறை சட்டத்திற்கு மாறானது என்று அறிவித்தது.

இருபதாம் நூற்றாண்டில் ஜ.நா. சபை சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு போன்றவை பழைய மற்றும் தற்கால அடிமைத்தனத்தைத் தடுப்பதற்குப் பல சட்டங்களை இயற்றியுள்ளன. ஓரிரண்டு நாடுகளைத் தவிர ஒரு காலத்தில் பரவலாக வழக்கில் இருந்த அடிமை முறை இன்றும் ஏறத்தாழ எல்லா நாடுகளிலும் நீடிக்கிறது.

சர்வதேச அளவில் உலகம் முழுவதும் பெண்கள், குழந்தைகள் உட்பட மொத்தம் 4.58 கோடி பேர் நவீனக் கொத்தடிமைகளாக உள்ளனர். இது கடந்த 2014-ஆம் ஆண்டு 3.58 கோடியாக இருந்தது. கொத்தடிமைகள் அதிகம் உள்ள 167 நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இது கடந்த 2014-ல் 1.43 கோடியாக இருந்தது. தற்போது 1.83 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த முறை நீடிக்க உலகில் நிலவும் ஏழை- பணக்கார சமூக ஏற்றத் தாழ்வானது அடிமைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. அடிமைகளால் பயனடைவோர் உலகில் வறுமை தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் ஒரு நிறுவனம் செய்த ஆய்வு விவரங்களின்படி அடிமை முறை வடிவத்தில் மாறியுள்ளது. தற்போதைய சூழலில் அன்றாட வாழ்வாதாரச் செலவுகள் அதிகரித்து வருகின்றன. அதனைத் தாக்குப்பிடிக்க முடியாமல் பல குடும்பங்கள் தவிக்கின்றன. திருமணச் செலவுகள் கடுமையாக அதிகரிப்பு, மருத்துவச் செலவுகளைச் சந்திக்க முடியாத நிலை, வறுமை, வேலை வாய்ப்புபின்மை ஆகியவையே கொத்தடிமைகளை உருவாக்குகிறது.

இதனால் ஏற்படக்கூடிய வறுமையை தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தி முப்பதாயிரம் முதல் ஒரு லட்சம் வரை முன் தொகை கொடுத்து அவர்களை முழுமையாக அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களை அடிமையாக்குகிறது. குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் அதிகம் சிக்கியுள்ளனர். வேளாண்துறையில் இருந்துவந்த கொத்தடிமை முறை மடை மாற்றம் செய்யப்பட்டு கார்ப்பெட் தயாரிப்பு நிறுவனங்கள், கல்குவாரிகள், செங்கல் சூளைகள், காபி தோட்டங்கள், துரித உணவகங்கள், ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு மாற்றப்பட்டிருக்கின்றன. மேலும் இது போன்ற தொழில்களில் ஈடுபட்டு வரும் கொத்தடிமைகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.

தெற்காசியாவிலேயே கொத்தடிமை முறைக்கு எதிராகச் சட்டமியற்றிய முதல் நாடு இந்தியா என்பது நாம் பெருமைபட்டு கொள்ள வேண்டிய விஷயம். ஆனால் சட்டம் இயற்றப்பட்ட நேரத்தில் இம்மண்ணில் அனைத்தும் துடைத்தெறியப்பட்டிருக்க வேண்டும். இது நம் அடிப்படை மனித மாண்பிற்கு, கண்ணியத்திற்கு, சோசலிச சமூக அமைப்பிற்கு முற்றிலும் விரோதமான அருவருக்கத்தக்க முறையாக உள்ளது. 1976-ஆம் ஆண்டு கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்டது. 40 ஆண்டுகள் ஆன பின்னும் கொத்தடிமை முறை ஒழிக்கப்படவில்லையென்றால் அடிமை முறை ஒழிப்பில் அக்கறையின்மையும் அரசியல் உறுதிப்பாடு இன்மையுமே இம்மண்ணில் தொடர்ந்து நிலவக் காரணமாகிறது. எத்தனையோ சட்டங்கள் அமல்படுத்திய பின்னரும், எவ்வளவோ சமூக மாற்றங்கள் நிகழ்ந்த பின்னரும் அடிமை முறை என்பது இன்றைக்கும் நம் சமூகத்தில் ஏதாவது ஒரு வடிவில் இருந்து கொண்டிருக்கிறது. அன்றைக்குப் பண்ணை அடிமை முறை. இன்று ஜ.டி துறை உள்ளிட்ட பல துறைகளில் கொத்தடிமை முறை உள்ளது. காலத்துக்கு காலம் அடிமை முறை தன் உருவத்தை மாற்றிக் கொள்கிறது அடிமையாகிறோம், கொத்தடிமையாகிறோம் எனத் தெரியாமலேயே அடிமையாகிறது நம் ஏழைச் சமூகம்.

தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 93 லட்சம் பேர். வேலையில்லாததால் ஏற்படும் பொருளாதாரப் பிரச்சனை, ஒருவர் எந்த வேலையும் செய்யத் தயார் என்ற நிலைக்குத் தள்ளுகிறது. இதுதான் அடிமை முறைக்கு வழிவகுக்கிறது.

படிக்காத பாமரர்களை மட்டுமல்ல, படித்த பொறியாளர்களையும் அடிமையாக நடத்தும் அவலம் நாட்டில் நடந்து வருகிறது. இது தற்போதைய நவீன அடிமை முறை. மேலும் தற்போதைய மற்றும் முந்தைய அரசுகளின் தவறான பொருளாதாரத் திட்டமிடுதலால் வேளாண்மை அழிந்து நகர்மயமாக்குதல் வேகமாக பரவலாக்கப்படுகிறது.

இதனால் பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம் மட்டும் மேலும் மேலும் சேர்ந்துகொண்டிருக்கிறது. மற்றொருபுறம் பெருவாரியான அடித்தட்டு, ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னிலும் அதிகமாய் வறுமையை அனுபவித்து வருகிறார்கள். இதன் விளைவாக தனியார் நிறுவனங்களிடம் கிடைத்த வேலைக்கு தஞ்சமடையும் நிர்ப்பந்தம் நிலவி வருகிறது.

வேலைக்காக இடம் பெயரும் தொழிலாளர்களில் உடனடியாகக் கொத்தடிமைக்கு உள்ளாக்கப்படுபவர்கள் வெளி மாநிலங்களில் உள்ள கம்பெனிகளுக்கு வேலைக்குச் செல்லும் தமிழக சிறுவர்கள் தான்.

பெற்றோரின் ஏழ்மையை அறிந்து கொண்டு புரோக்கர்கள் அவர்களை அணுகி கொஞ்சம் முன்பணம் கொடுத்து அவர்களை கூட்டிச் செல்வது இதில் அதிகம் இது ஒரு விதம்.

மற்றொரு விதம் ஏதோ ஒரு காரணத்திற்காக வீட்டை விட்டு வெளியேறும் சிறுவர்கள் புரோக்கர்களிடம் சிக்கிக்கொள்வது இந்த இரண்டு விதத்திலும் சிறுவர்கள் சித்ரவதைக்கு உள்ளாவது நிச்சயம்.

இவர்களிடம் அதிப்படியான நேரம் வேலை வாங்குவது, ஓய்வு இல்லாமல் உழைக்கச் சொல்வது, சரியான உணவு தராமல் சித்ரவதை செய்வது போன்றவை நடக்கின்றன. அதற்கும் மேலாக கொதிக்கும் எண்ணெய் சட்டியில் கையை விட வைத்தனர். கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவினர். பிறப்புறுப்பில் எட்டி உதைத்தனர் என நெஞ்சை உறையவைக்கும் தகவல்கள் நாளிதழ்களில் வந்த செய்திகளைப் பார்த்ததன் மூலம் கொத்தடிமை முறை தொடர்வதை உறுதி செய்ய முடிகிறது. தமிழக மக்கள் தொகையில் 35 சதவீதம் பேர் சிறுவர்- சிறுமிகள். இவர்களில் கணிசமானோர் தினசரி காணாமல் போவதாக புகார் வருகிறது. இவர்களில் பலர் திரும்பக் கிடைப்பதே இல்லை என தமிழக அரசு மிஸ்ஸிங் சைல்டு பீரோ அமைப்பு கூறுகிறது.

தெற்காசிய நாடுகளில் கொத்தடிமை முறைக்கு எதிராகச் சட்டமியற்றிய நாடு இந்தியா. 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 24-ஆம் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு அவசரச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. 1976-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க உயிர் துடிப்புள்ள ஆவணமாகும்.

இந்தியாவில் சட்டங்களுக்குப் பஞ்சமே இல்லை. உலகிலேயே அதிகமான சட்டங்களை இயற்றியுள்ள நாடு இந்தியா தான். ஆனால், அமலாக்கம் என்று வரும்போது அலங்கார அணிகலன்களாக இருக்கின்றதே தவிர, நிஜமான வலுவான செயலாக்கம் மிக்க ஆவணங்களாக இல்லை என்று கூறுகிறார் நீதிபதி.

மேலும் கொத்தடிமை முறையின் அருவெருப்பூட்டும் தன்மைகளைப் பற்றி உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என். பகவதி பந்துவா, முக்தி மோர்ச்சா வழக்கின் தீர்ப்பில் கொத்தடிமை முறை என்பது இந்த நாட்டில் நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. பொருளாதார நிலைகளில் உள்ள இடைவெளி தான் இதற்குப் பிரதானக் காரணம். அரசியல் சுதந்திரம் பெறுவதற்கு வெகுகாலம் முன்பிருந்தே நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை இருந்து வருகிறது. இது வெட்கப்படத்தக்க அம்சமாகும்.

ஏராளமான மனிதர்களின் துன்ப, துயரங்களை- வறுமையை வைத்து வியாபாரம் நடத்தும் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக சக்தி படைத்த நபர்களின் சுரண்டலே இதற்கு அடிப்படையாகும்.

இந்தக் கொத்தடிமை முறை அடிப்படையான மனித கண்ணியத்திற்கு இழுக்கு என்பது மட்டுமல்ல, அரசியல் சட்ட மாண்புகளை முற்றிலும் மீறுவதாகும் அருவெருப்பூட்டுவதுமாகும் என்கிறார்.

நிலச்சீர்திருத்தச் சட்டங்களை அமல்படுத்தவேண்டும். கட்டாய இலவசக்கல்வி வழங்கவேண்டும். தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப அரசுத் துறைகளில் வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். சமரசமின்றி இட ஒதுக்கீட்டை அமலாக்க வேண்டும். இதைத் தனியார் துறையிலும் பின்பற்ற வேண்டும். விவசாயத்துறையில் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். கிராமப்புறங்களில் இருந்து நகர்புறங்களை நோக்கி மக்கள் செல்லாமல் இருக்க கிராமப்புறங்களில் புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். சுகாதாரம் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் எளிய மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். சமூக நலத்திட்டங்களை எளிய மக்களுக்கு கிடைக்கச் செய்யவேண்டும். இதுவே ஒட்டு மொத்த சமூக மாற்றத்திற்கான தீர்வு.


நன்றி: பி. பாலசுப்பிரமணியம்
சி.பி.எம் கட்சி, விருதுநகர் மாவட்டம்

Oct 11, 2016

புதிய கல்விக்கொள்கை ஏன் எதிர்க்கப்பட வேண்டும்..?

New Education Policy should be opposed

“வரைவு தேசியக் கல்விக்கொள்கை–2016 சில உள்ளீடுகள்” எனும் அறிக்கை மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. புதிய தேசியக் கல்விக்கொள்கையின் முடிவாக 21 தலைப்புகளில் 143 கொள்கை முன்மொழிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 

இதில் உள்ள பல அம்சங்கள், இன்றையக் கல்வியின் மோசமான தன்மைகளை உரத்த குரலில் முழங்கினாலும், இதில் மாற்றம் செய்வதற்கான செயல்திட்டம் எதையும் முன்வைக்கவில்லை! மாறாக, வரலாற்றைப் பின்னுக்கு இழுக்கும் பிற்போக்கு அம்சங்களே இந்த வரைவுத் திட்டத்தின் பிற்பகுதியில் விரிவாக உள்ளன! அவை ஆபத்தானவை மட்டுமல்ல! இந்திய முன்னேற்றத்திற்கு எதிரானவை! இதனை எதிர்க்கவும் இவ்வரைவை மாற்றவும் அவசியமுள்ளது.“அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி என்னவென்றால்,எல்லோருக்கும் கல்வி அளிப்பதுதான். அவர் தனது வாழ்நாள் முழுவதும்கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினார்.

அவர் கூறியவை, இப்போதும்அரசு நிர்வாகத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன”இது, யாரைப் பற்றி, யார் பேசியது தெரியுமா? காந்தியைப் பற்றி அன்றைய பிரதமர் நேரு பேசியது என்று நீங்கள் நினைத்தால் அதில் தவறில்லை! உங்களைப் போலத்தான் நானும் முதலில் நினைத்தேன்! ஆனால், நம்மை ஏமாற்றி விட்டு, இவ்வளவு அழகாகப் பேசியது யார் தெரியுமா? தில்லியில், டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தின் அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்து கொண்ட இன்றைய பிரதமர் நரேந்திர மோடி, டாக்டர்அம்பேத்கர் பற்றிப் பேசிய பேச்சே இது! ஆனால், அப்படிப் பேசிய பிரதமரின் தலைமையில் இயங்கும் மத்தியமனித வள மேம்பாட்டுத்துறை வெளியிட்டிருக்கும்.

“தேசியக் கல்விக் கொள்கை-2016 வரைவிற்கான சில உள்ளீடுகள்” எனும் அறிக்கையோ, இதற்கு நேர் மாறாக இருக்கிறது! ஏன் இப்படிச் செய்கிறார் எனில், அதுதான் அரசியல் சமரசம்! (அவர்கள்மொழியில் அரசியல் வியூகம்! எதிர்க்கருத்துகளை உள்வாங்கிக் கொண்டுஅதனோடு சமரசம் செய்துகொண்டு, எப்படியாவது ஆட்சியைப் பிடிப்பதும், பிடித்த ஆட்சியைத் தக்கவைப்பதும், அதற்காக எந்தநாடகமும் போடுவதும்!) இல்லையெனில், பெருவாரியான உழைக்கும் மக்களின் சர்வசாதாரண உணவான மாட்டுக்கறி சாப்பிடுவோரைக் கொலை செய்துகொண்டே “தலித்துகளைக் கொலைசெய்வோர் முதலில் என்னைக் கொலை செய்யட்டும்” என்று மேடையில் முழக்கமிடுவாரா? மாட்டுக் கறியில் இவ்வளவு அரசியல் செய்தும், தோல் வியாபாரம் செய்வதை மட்டும் கண்டுகொள்ளாமல் உலகமுழுவதும் வெட்கமில்லாமல் தொடர்வார்களா?

முதலில் இந்த வரைவைத் தயாரித்த குழு எத்தகையது என்பது பற்றி அறிந்தாலே இதன் பின்னணி புரிந்துவிடும். இதுவரையான இந்தியக் கல்விக் குழுக்கள் அனைத்தும், கல்வியாளர்களைக் கொண்டே அமைக்கப்பட்டிருந்தன என்பது வரலாறு. இதுவரை இந்தியக் கல்விக்குழுக்களில் கல்வியாளர் யாரும் இல்லாதகல்விக்குழு என்றால் அது 2016-ல் மோடி அரசால் அமைக்கப்பட்ட டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் தலைமையிலான ஐஏஎஸ் குழுதான்!இதன் தலைவர் சுப்பிரமணியம் மட்டுமல்லாமல் ஏனைய நான்கு பேரில் மூவர் –அதாவது குழுவில் ஐந்தில் நால்வர் – ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளாவர்! தில்லி, குஜராத் போலும் –சட்டம் ஒழுங்கில் தோல்வியடைந்த- உள்துறை மற்றும் தலைமைச் செயலர்கள் என்பதும் அதில் குறிப்பிடத் தக்கதாகும்! எஞ்சிய நாலாமவர் மட்டும் முன்னால் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதோடு முன்னால் என்சிஇஆர்டி தலைவரும் ஆவார். அதாவது, தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கிண்டல் செய்த, அம்பேத்கரை நேரு சாட்டையால் அடித்து வேலைவாங்குவதுபோலும் ஆபத்தான பாடத்திட்டக்காரர் இவர்!ஆயிற்றா? இக் குழு முன்வைக்கும் திட்டம் எப்படி நமது அடித்தட்டுக்குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் என்பது முக்கியமான கேள்வி!ஆக, இது எதிர்க்க வேண்டிய மாற்றவேண்டிய குழு என்பது சரிதானே?(இந்தக் குழுவில் ஐந்தில் நான்குபேர் ஐ.ஏ.எஸ்-களாக இருப்பதால்தான், புதிய கல்வியில் ஐ.இ.எஸ். என்றொரு அதிகார வர்க்கத்தினருக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.)

அடுத்து, இந்தக் கல்விக்குழுவை அமல்படுத்த, கல்வியமைச்சர் என்பதன் புதிய பெயரான மனித வள மேம்பாட்டுத் துறையின் அமைச்சராக இருந்தவர் ஸ்மிருதி இரானி என்னும் பெண் அமைச்சரைவிடவும் திறமையானவர் தற்போது இத்துறையைப் பார்த்துவரும் ஜவடேகர்தான் என்பதற்கும் ஒரு பின்னணி உண்டு!அந்தம்மா பாவம் படித்த படிப்பு என்ன என்பதில் ஊர் சிரித்துவிட்டது. அதை விடவும் ஆர்.எஸ்.எஸ்.பின்புலமுள்ள ஜவடேகர்தான் பொருத்தமானவர் என்பதில் என்ன ஒரு தெளிவு! புரிகிறதா? புரியவேண்டும்!இவர்கள் முன்வைத்த வரைவின் முதல் பத்தி இப்படித் தொடங்குகிறது – “இந்தியா கல்விக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளது. பண்டைய இந்தியாவில் முதன்முதலில் முகிழ்த்த கல்விமுறை வேதம் சார்ந்த கல்விமுறை என்று அறியப்படுகிறது”எவ்வளவு பச்சைப் பொய் அல்லது வரலாற்றை மறைக்கும் வஞ்சகமிது? வேதகாலத்திற்கும் முந்திய சிந்துவெளி நாகரிகம், திராவிட நாகரிகம் என்பதும், அதில் திராவிட மொழிப் பயன்பாடு இருந்திருக்கிறது என்பதும் அதிலும் குறிப்பாக 2,000 ஆண்டுகளுக்கு முன்பே கல்வியை சாதி ஏற்றத் தாழ்வு பாராமல் கற்பித்த –மதச்சார்பற்ற- சமூகம் தமிழ்பேசிய மக்களிடம் நிலவியது என்பதும் ஏன் மறைக்கப்படுகிறது?“மேற்பால் ஒருவன் கற்பின் கீழ்ப்பால் ஒருவனும் அவன் கண்படுமே?” என்ற புறநானூறும், இன்றுவரையான உலகம் முழுவதுமான கல்வியை அப்போதே இரண்டாகப் பகுத்துத் தந்த வள்ளுவன் கல்வியாளனல்லவா? “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்னும் குறள்வழிப் பிறந்ததுதானே “கலை-அறிவியல்” பாடம்அப்படியானால் இதில் இரண்டு தவறான முன்மொழிவுகள் உள்ளன.(1)வேதக்கல்விதான் இந்தியக்கல்வியின் முன்னோடிக் கல்விமுறை என்னும் தவறு (2)வேதக் கல்வி முற்போக்கானது எனும் பெருந்தவறு!பிராமண-சத்திரிய-வைசிய-சூத்திர நால்வர்ணத்தினரில், பிராமணர்க்கு மட்டுமே கல்வி கற்பிக்கும் உரிமை இருந்தது.

சத்திரியர் தவிர்த்தஇருவர்ணத்தினர்க்குக் கற்கும் உரிமையும் கிடையாது என்பதுதானே ஏகலைவன், கர்ணன் போன்றோர் தரும் மகாபாரதக் கதைகளின் கரு?இதிலும் கூட “மேல்வர்ண”ப் பெண்களுக்கும் இந்த உரிமை இல்லை யாம்!இதற்கு மாறாக, வேத காலத்திற்கும் முந்திய “சங்க இலக்கியம்” எனும் தமிழின் பழந்தமிழ்ப் பெட்டகத்தில், சுமார் 40பெண் கவிஞர்களோடு, பிராமணர் அல்லாத நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்களும் இருந்ததை இவர்கள் மறைக்கிறார்களா? அல்லது ஞாபகமாக மறக்கிறார்களா?அந்த வேதக் கல்வியில் அறிவியல் இருந்தது என்பது அடுத்த பொய்!இதை நமது பாரதப் பிரதமர் திருவாளர் மோடி அவர்களே விஞ்ஞானிகள் மாநாட்டில் போய்(?) ஆற்றிய உரையில் திருவாய் மலர்ந்தாரே? அதாவதுஅந்த வேதக்காலத்திலேயே –புராணக் கதைகள் தரும் சாட்சியத்தோடு- இராவணன் சீதையைத் தூக்கிச்சென்ற புஷ்பக விமானம், இன்றைய ஆகாய விமானத்தின் முன்மாதிரி என்றும், பிள்ளையாரின் மனித உடல் யானைத் தலையே பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சையின் முன்னோடி என்றும் அவர் பேசிய புகழ்பெற்ற பேச்சு ஏதாவது ஒரு வகுப்பில் ஒரு பாடமாக இடம்பெற்றால் ஆச்சரியமென்ன இருக்கப் போகிறது?

ஐந்து வகுப்பு வரை தாய்மொழிக்கல்வி என்பது கூட அழுத்தமாகச் சொல்லப்படவில்லை! அதை அந்தந்த மாநிலங்கள் முடிவுசெய்யலாமாம்! (தமிழ்நாட்டில்தான் –அரசரை விஞ்சிய அரச விசுவாசிகள்- ஏற்கெனவே தமிழ் இல்லாமலே பட்ட மேற்படிப்புவரை படிக்கலாம் என்கிறார்களே!) அதற்கும் மேல் அதாவது 6-ஆம் வகுப்பிலிருந்து மும்மொழித்திட்டமாம்! ஆயிற்றா.. இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத அனைவரும் இனிஇந்தியை ஏற்றே ஆகவேண்டும்! (வரலாறு திரும்புமா உடன்பிறப்புகளே?) அதோடு, “இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியான“ சமஸ் கிருதம் படிக்க “தாராள நிதிஉதவி” அனைத்துக் கல்விநிறுவனத்திற்கும் உண்டாம்!திவசம் நடத்தும்போது மட்டுமே கேட்டறிந்த சமஸ்கிருதத்தை இனிமேல் வாழ்நாள் முழுவதும் கேட்கலாம் அல்லது வாழ்நாளே திவசமாகலாம்!

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் தெரியும். மூன்று மாங்காய் அடிக்கலாம் என்று இந்தக் கல்வித்திட்ட வரைவு கற்றுத் தருகிறது! அதாவது, சமஸ்கிருத வளர்ச்சியில் மூன்று நோக்கமுண்டு. 1.அதைத் தற்போது தெரிந்துவைத்திருக்கும் ஒருசில ஆயிரம் உயர்சாதியினர்க்கும் உடனடி வேலைவாய்ப்பு 2.அதை வளர்ப்பதன் வழியே இந்தியையும் வளர்க்கலாம். 3.வேறென்ன? உயர்சாதி மேலாதிக்கத்தை வளர்த்துக்கொள்ளலாம். இதன் வழியே இந்துத்துவா-ஏக இந்தியா-ஒரே பண்பாடு-ஒரே தலைமை! எப்புடீ?எனவேதான் இந்த வரைவுக் கல்வித்திட்டத்தில் 60ஆண்டுகளாகப் போராடி இன்னும் சென்று சேராத இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டுவது,அதன்வழி சமூக நீதிக்கு சவக்குழி தோண்டுவது, தகுதித் தேர்வு எனும் பெயரில் உழைக்கும் மக்களை ஓரங்கட்டுவதை நடைமுறைப்படுத்தி விடலாம்!அப்படியும் 6-ஆம் வகுப்பிலிருந்து தேர்வு வைத்து, பெரும்பாலான பெண் குழந்தைகளைக் கிராமத்திலேயே அடைத்துவிடலாம். அதிலும் மீறிப்படிக்க நினைப்போரை 9,10-ஆம் வகுப்புகளில் ஏ, பி என்ற பிரிவில் பிரித்து, தொழிற்கல்வி எனும் பெயரில் குலக்கல்வியைக் கொடுக்கலாம்.

அதிலும் மீறி மதிப்பெண் எடுத்தாலும் கல்லூரிக் கல்விக்குச் செல்ல உதவித்தொகை வேண்டுமானால், அகில இந்தியத் தகுதித் தேர்வுமுறை இருக்கவே இருக்கிறது! இதில் அகில இந்திய அளவில் பத்துலட்சம் பேருக்கு உதவித் தொகையாம்! சுமார் பத்துக்கோடிப் பேர் எழுதக்கூடிய பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் பத்துலட்சம் என்பது எப்படியான வடிகட்டல் என்பதைச் சமூகநீதிக் கண்ணோட்டத்தில் பார்த்தால் இதன் ஆபத்தும் அதனுள் கிடக்கும் இந்துத்துவா ஆபத்தும் புரியும்!இந்திய நாடாளுமன்றத்தில் சீத்தாராம் யெச்சூரி சொன்ன மூன்று “சி” ஆபத்துத்தான் இதன் மையம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்(1) கம்யூனலைசேஷன், (2) கமர்ஷியலைசேஷன் (3) சென்ட்ரலைசேஷன் எனும் மூன்று ‘சி’ க்கள் அதாவது மதமயம், வணிகமயம், மத்தியமயம் எனும் முப்பெரும் ஆபத்துகளை உள்ளடக்கியதான இந்தப் புதியக் கல்வி வரைவுக்கொள்கை மிகவும் ஆபத்தானது.என்று அவர் சொன்னதை மனதில் கொண்டு, இந்தப் புதிய கல்விக்கொள்கை முற்றிலும் மாற்றம் செய்யப்படவேண்டும். கல்வியாளர்கள் முன்வைக்கும் மாற்றங்களோடு புதிய கல்விக்குழுவே அமைக்கப் படவேண்டும். அதுதான் புதிய இந்தியாவுக்கான முன்மொழிவாக இருக்கமுடியும்.

நன்றி: நா.முத்துநிலவன்

வானிலை

Image and video hosting by TinyPic

உலகத்தமிழன்

Image and video hosting by TinyPic
Image and video hosting by TinyPic